ஓ.பி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லும்: உச்சநீதிமன்றம்!

ஓ.பி.எஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத்தின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் எம்.பியாக தொடர அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக -பாஜக படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேனி தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேனி தொகுதியில் அதிமுக சார்பில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரவீந்திரநாத்துக்காக தேனியில் பிரதமர் மோடியே வந்து பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் வரலாற்றில் தேனி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் யாரும் வந்ததே இல்லை. தேனியில் அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற ரவீந்திரநாத் அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும், எனவே தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மிலானி தனது மனுவில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை என்று கோரியிருந்தார். ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எம்.பி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சாட்சி கூண்டில் ஏறி கேள்விகளுக்கு பதிலளித்த ரவீந்தரநாத், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல் தேர்தல் அதிகாரிகள் முன் ஆஜராகி ஆவணங்களையும் அளித்திருந்தார்.

கடந்த 3 ஆண்டு காலமாக பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து கடந்த மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார். வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 28ஆம் தேதி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி சுந்தர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் தேதி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். தனது தரப்பு வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார் தேனி எம்.பி ரவீந்திரநாத். தொடர்ந்து, மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதில் அளித்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 6ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது. அதில், விவசாயத்தில் மட்டுமே வருமானம் கிடைத்ததாக வேட்பு மனுவில் கூறிய நிலையில், வாணி பின்னலாடை நிறுவனத்தில் இயக்குனராக இருந்தபோது வாங்கிய சம்பளம், வாணி பேப்ரிக்ஸ் நிறுவனத்தில் 15 ஆயிரம் பங்குகள் வைத்திருப்பது ஆகியவற்றை ரவீந்திரநாத் மறைத்துள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் 4 கோடியே 16 லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துகள் இருக்கக்கூடிய நிலையில், ஒரு கோடியே 35 லட்ச ரூபாய் சொத்து மட்டுமே வேட்பு மனுவில் காட்டியிருக்கிறார். இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையான விசாரணை செய்யவில்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் மேல் முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தேர்தல் வெற்றி செல்லாது உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதனையடுத்து ரவீந்திராத் எம்பியாக தொடர்வதில் இருந்த தடை நீங்கியுள்ளது.