அரியானா வன்முறைக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

அரியானாவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். அரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். இதைத் தொடர்ந்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. நூ மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் வன்முறை பரவியது. இந்த வன்முறையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உள்ளது. வன்முறை சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், நூ, பரிதாபாத் மற்றும் பல்வால், குருகிராம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுவரை கலவரம் தொடர்பாக, 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஏறத்தாழ மூன்று மாதங்களாக பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. வன்முறையால் மிகவும் கொடூரமாக பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நடந்த சம்பவங்கள் ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கின. மணிப்பூர் சம்பவத்தின் ரணம் இன்னும் முழுமையாக மறைவதற்குள் மற்றொரு பாஜக ஆளும் மாநிலமான அரியனாவிலும் வன்முறை வெடித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

அரியானாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு உடனே முடிவு கட்ட வேண்டும் என்றும் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் அரியானா விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அரியானா மாநிலத்தில் அண்மையில் நடந்த மத வன்முறையில் பாதிக்கப்பட்டு, பெரும் வேதனைக்கும் கடுந்துயருக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோருக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் மனமிரங்குகிறேன். அமைதி, அகிம்சை, நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றில்தான் உண்மையான வலிமை உறைந்துள்ளது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். வெறுப்புணர்வும் பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. கலவரக்காரர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, விரைவில் இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதைத் தக்க முறையில் உறுதிசெய்திட வேண்டும் என்றும் அரியானா அரசினை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாஜகவை வெறுப்புணர்வு கட்சி, பிரிவினைக் கட்சி என தொடர்ந்து விமர்சித்து வரும் ஸ்டாலின், தனது டுவீட்டிலும் இந்த வார்த்தைகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.