கரூரில் செந்தில் பாலாஜி உதவியாளரிடம் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் உள்பட 3 பேரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் 2 நாட்களாக தீவிரமாக சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் அமலாக்கத்துறை சோதனை முடிவுக்கு வந்தது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தாலும் கூட செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக உள்ளார். இதற்கிடையே அவரது தம்பி அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலம் காலஅவகாசம் கோரியுள்ளார்.

இதற்கிடையே தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் மீண்டும் சோதனையை நடத்தினர். நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் கரூரில் மொத்தம் 6 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர், “தனலட்சுமி செராமிக்ஸ்” என்ற பெயரில் டைல்ஸ் தொழில் செய்து வரும் குஜராத்தை சேர்ந்த பிரகாஷ், டையிங் நிறுவன உரிமையாளர் செந்தில் ஆகியோர் சிக்கினர். செந்தில் பாலாஜியின் உதவியாளரான உள்ள சங்கரின் வீடு, அலுவலகம், பிரகாசின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் நேற்று முன்தினம் தொடங்கிய சோதனை நேற்று மதியத்துடன் முடிவடைந்தது.

இதையடுத்து லக்கி டிரேடர்ஸ் என்ற அவரது டையிங் நிறுவன டையிங் நிறுவன உரிமையாளர் செந்தில் வீடு, அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கரூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் சோதனை நடந்தது. இந்த சோதனையும் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் கடந்த 2 நாட்களாக கரூர் மாவட்டத்தில் 6 இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. 2 நாட்களாக நடந்த இந்த சோதனையின் முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களின் வீடு, அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் அந்த ஆவணங்கள் எந்த வகையை சேர்ந்தவை என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. தற்போது அமலாக்கத்துறை கைப்பற்றிய இந்த ஆவணங்களை ஆராய உள்ளனர். தேவை என்றால் அதுபற்றி விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் அவர்களை அழைக்கவும் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.