ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்வில் கல்வீச்சு, வாகனங்களுக்கு தீவைப்பு!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தின்போது தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட பயங்கர வன்முறையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், ஆந்திரா அரசின் நீர் மேலாண்மை திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முன்னதாக, சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தை தடுத்து நிறுத்துவோம் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பெத்திரொட்டி ராமச்சந்திரா ரெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர், ‘சந்திரபாபு கோ பேக்’ என முழக்கம் எழுப்பினர்.

குறபலக்கோட்டா அருகே, சந்திரபாபு நாயுடுவின் கான்வாயை ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, இரண்டு கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு, சோடா பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர். ஆவேசமடைந்த கட்சி தொண்டர்கள் காவல்துறையின் இரண்டு வாகனங்களுக்கு தீ வைத்தனர். இரு கட்சிகளின் தொண்டர்களையும் விரட்டியடிக்க போலீசார் தடியடி மேற்கொண்டனர். போலீசார் நடத்திய தடியடியில் பலர்காயம் அடைந்தனர். மேலும், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடு வாகனத்தின் மீது நின்றபடி ஆவேசமாக உரையாற்றினார். அவரை சூழ்ந்து நின்று சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு அளித்தனர். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தெலுங்கு தேசம் கட்சியினரை சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பொறகு செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆளும் கட்சியினருடன் போலீசாரும் இணைந்து, தெலுங்கு தேசம் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம்சாட்டினார். வெடிகுண்டுகளுக்கே பயப்படாத நான் கல்லுக்கு பயப்படுவேனா என்றும் கேள்வி எழுப்பினார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணத்தின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தால் அன்னமையா மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. வன்முறை நடந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.