அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் கடந்த 3 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் இந்த சோதனையின் போது கைப்பற்றட்டது என்ன என்பது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
போக்குவரத்து துறை ஊழியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்று அதில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட புகாரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு கடந்த ஜூன் 21ஆம் தேதியன்று பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தார். இதையெடுத்து கடந்த ஜூலை 17ஆம் தேதியன்று காவிரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவரது கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனுக்கு இடங்களில் சோதனை நடத்தியது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் பணம் வசூலிக்கும் வேலையை வீரா.சாமிநாதன் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அமலாக்கத்துறை சோதனைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் சோதனையின் போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் திமுக ஒன்றிய செயலாளர் சாமிநாதன் வீட்டில் சோதனை நடைபெற்றது. வீரா.சாமிநாதனுக்கு சொந்தமாக வெளிமாநிலங்களில் நிதி நிறுவனங்கள் மற்றும் பழனியில் தனியார் பள்ளி ஆகியவை உள்ளது.செந்தில் பாலாஜியின் கைதுக்கு பின்னர் அவரது ஆதரவாளர் என்ற சந்தேகத்தின்பேரில் சாமிநாதனின் ஆசிமேடு பகுதியில் உள்ள இல்லத்திலும் சமத்துப்பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டிலும் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை அமலாக்கத்துறை பகிர்ந்துள்ளது. அமலாக்கத்துறை வெளியிட்ட பதிவில், “கடந்த 3 ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ரூ.22 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ரூ.16.6 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத பொருட்களும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.