என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் 28 வட இந்தியர்கள்!

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் 28 வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் என்.எல்.சி நிர்வாகம் முறையாகச் செயல்படவில்லை என தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. 1956-ஆம் ஆண்டு தொடங்கி இப்போது வரை 37,256 ஏக்கர் நிலம் என்.எல்.சி நிறுவனத்தால் நிலக்கரியை வெட்டி எடுப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலங்கள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் குடும்பங்களுக்கு சொந்தமானவை. கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வைத்திருந்த 25 ஆயிரம் குடும்பங்களும் சுயமரியாதையுடனும், பொருளாதார தன்னிறைவுடனும் வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் இருந்து என்.எல்.சி நிலங்களை கையகப்படுத்திய பிறகு அவர்கள் வாழ்வாதாரமான நிலமின்றி பல்வேறு வேலைகளுக்குச் சென்று வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்வதற்கு மாற்று இடங்கள் வழங்கப்படவில்லை என்றும் நிலங்களைக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்தும் அங்கு வேலை கிடைக்காத குப்புச்சாமி என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என்.எல்.சி நிர்வாகத்திற்கு நிலம் கொடுத்த ஒதுக்கீட்டில் பணி பெற்றவர்கள் பட்டியலை பெற்றுள்ளார். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு என்.எல்.சி நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில், 1990 முதல் 2012 வரை நிலம் கொடுத்ததற்காக 862 பேருக்கு என்.எல்.சியில் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில் 28 வட மாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது என ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது. நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்.எல்.சி பணி வழங்கியதில் 834 பேர் மட்டுமே நிலம் கொடுத்தவர்கள் என்றும், 28 வட மாநிலத்தவர்களுக்கு எப்படி வேலை வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுந்துள்ளது.