தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலினுக்கு ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரியாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது அவருக்கு புரிந்திருக்காது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் இந்திய மக்களிடம் குறைவாக இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் என்றாவது ஒருநாள் இந்தியை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என பேசினார். இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரையில் நடைபயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியதாவது:-
தமிழகத்தில் தமிழ் வளர்ந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மதுரை தான். நான்காவது தமிழ் சங்கத்தை தாண்டி ஐந்தாவது தமிழ் சங்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர், பிரதமர் மோடி.
7.53 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாட்டை கடன்கார மாநிலமாக, குடிகார மாநிலமாக மாற்றிவிட்டு, இன்னும் இந்தி தமிழ் பிரச்சனையை வைத்து வண்டியை உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். முக ஸ்டாலினுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. எனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ன சொன்னார் என்றும் அவருக்கு புரியாது. கல்வியை தாய் மொழியில் வழங்க வேண்டும் என்றே அமித்ஷா தெரிவித்தார். திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்து வருகிறது. ஏனென்றால் மக்களிடம் ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு முக ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்தக் கருத்தும் இல்லை. அதனால் எதையுமே புரியாமல் அரசியலுக்காகப் பேசுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி எங்காவது ஒரு இடத்தில் இந்தி தொன்மையான மொழி எனப் பேசியதை மு.க.ஸ்டாலினை காட்டச் சொல்லுங்கள். ஆரம்பம் முதலே தமிழ் மொழி பற்றி, திருக்குறள் பற்றிப் பேசி வருகிறார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு இருக்கை அமைக்கிறார். ஐந்தாவது தமிழ்ச் சங்கம் எடுத்த பெருமைக்குரியவர் என யாரையாவது சொல்ல வேண்டுமென்றால் அது நமது பிரதமர் மோடி தான் எனத் தெரிவித்தார்.
பாஜகவுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வாழ்வா சாவா தேர்தல், தேர்தலுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “வாழ்வா சாவா தேர்தல் எங்களுக்கு அல்ல. முதலமைச்சர் ஸ்டாலின் தோற்றால் அக்கா கனிமொழி, திமுகவின் தலைவர் ஆகிவிடுவார். போன முறை திமுக ஜெயித்தது வெறும் ஒன்றரை சதவீதம் வாக்குகளில் தான். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் இது வாழ்வா சாவா தேர்தல். இதில் திமுக தோற்றால் நிச்சயம் தலைமையில் மாற்றம் ஏற்படும். தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையப்போவது உறுதியாகிவிட்டது. திமுகவில் இன்று முறைப்படி தேர்தல் வைத்தால் கனிமொழி தான் ஜெயிப்பார். இதை நான் சொல்லவில்லை. இந்த பாதயாத்திரையில் 15 தொகுதிகளைக் கடந்துவிட்டேன். திமுகவினரே சொல்கிறார்கள், எங்களுக்கு குடும்ப ஆட்சி வேண்டாம் என்று, கனிமொழி வந்தாலும் அது குடும்ப ஆட்சிதான் என்பது வேறு கதை” எனத் தெரிவித்தார்.
கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களை நம்பக்கூடாது. சினிமா நடிகரை கீழடிக்கு மதுரை எம்.பி. அழைத்து சென்று பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். மக்கள் வெளியே, சினிமா நடிகர்களுக்கு உள்ளே அனுமதி என்ற நிலை உள்ளது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்து நான் பேசிய கருத்தை மாற்றிக் கொள்ளப்போவது இல்லை. அவரை பற்றி பேசி நான் என் தரத்தை குறைத்து கொள்வதும் இல்லை. ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றம் வருவது நல்லதுதான். அப்போது தான் அவர் ஏதாவது சேட்டை செய்து பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உதவி செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.