வளர்ச்சி தொடர்பான அரசின் கொள்கை முடிவில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்றும் என்.எல்.சி. நிறுவனத்திற்காக கையகபடுத்தபட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகத்தின் சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, வளையமாதேவி மேல்பாதி, வளையமாதேவி கீழ்பாதி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007- ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இற்காக சமீபத்தில் வாய்க்கால் வெட்டும் பணியின் போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கும், என்.எல்.சி.-க்கும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, என்.எல்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 88 விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு ஏக்கருக்கு 40 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நிலம் முழுமையாக கையகப்படுத்தபட்ட நிலையில், அதில் தொடர்ந்து விவசாயம் செய்வதை அத்துமீறி நுழைந்ததாகத்தான் கருத வேண்டும் என்று தெரிவித்தார். கையப்படுத்தப்பட்ட நிலம் சுரங்கப்பணிகளுக்கு தேவைப்படுவதாகவும், படிப்படியாக அந்த நிலங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். 2006ஆம் ஆண்டு முதல் நடப்பு ஆண்டு வரை என்.எல்.சி.-க்காக 602 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அதற்கான இழப்பீடு மற்றும் கருணை தொகை பெற்றுள்ள நிலத்தின் உரிமையாளர்கள், நிலத்தில் உரிமைகொண்டாட முடியாது என தெரிவித்தார். ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 14 லட்சம் ரூபாய் மற்றும் 25 லட்ச ரூபாய் என வெவ்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, மேற்கொண்டு எந்த நிவாரணத்தையும் எதிர்பார்க்க முடியாது என கூறி, மனுவை ஏற்க கூடாது என வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, கருணைத் தொகை பெறாதவர்களுக்கு கருணைத் தொகை வழங்குவதற்காக அரசு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார். மேலும், அதற்குள் விவசாயத்தை முடித்து அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டுமென குறிப்பிட்டார்.
இதைபதிவு செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கருணைத் தொகை முழுவதையும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் அந்த தேதியில் நிலத்தை ஒப்படைக்க வேண்டுமெனவும், அறுவடை முடியாவிட்டால் அறுவடை செய்த பிறகு ஒப்படைக்க வேண்டுமெனவும், புதிதாக ஏதும் பயிரிடக்கூடாது எனவும் விவசாயிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
25 லட்ச ரூபாய் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது என்று கூறி, நில கையகபடுத்தும் பணிகள் முடிந்த நிலையில் எந்த கோரிக்கையையும் வைக்க முடியாது என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்த நிலத்தை பாதுகாக்க வேண்டியது என்.எல்.சி.-யின் பொறுப்பு என்றும், அதற்கு பிறகு நிலத்தில் நுழைபவர்கள் அத்துமீறுபவர்களாக கருதி, சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டார்.
விளைவித்த பயிர் கண்ணெதிரே அழிக்கப்படுவதை எந்த விவசாயியும் ஏற்கமாட்டார் என்றும், அதன் வெளிப்பாடாகவே போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும் இதற்காகத்தான் அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், பொதுச்சொத்துக்கு ஏற்பட்ட இழப்பீடை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டிய கடமை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். எனவே கூடுதல் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்தார்.