தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சொல்லப்படும் ஆடியோ குறித்து விசாரிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இந்த ஆடியோவின் உண்மை தன்மை உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பொதுவெளியில் என்னை வில்லனாக சித்தரிப்பதில் தோல்வியடைந்ததால் எனக்கு எதிரானவர்களின் உத்தியில் மாற்றம் தெரிகிறது. நான் ஏதோ தனிமையில் சிலுவையில் அறையப்பட்டவன்; கட்சியில் பலி கொடுக்கப்பட்டவன் போல என்னை சித்தரிக்க முயற்சிக்கின்றனர். பொது வாழ்வில் நான் எதைச் செய்தாலும் அது என் தலைவரான திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தான்; எங்களைப் பிரிக்கும் எந்த தீய முயற்சியும் வெற்றி பெறாது என கூறியிருந்தார்.
இதேபோல தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இதுகுறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கு. மேலும் இதுபற்றி பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை என காட்டமாக பதில் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் பிடிஆர் ஆடியோ தொடர்பாக விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தை அணுகக் கூடாது. இது அப்பட்டமான பொய்யான மனு. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டது. இம்மனு டிஸ்மிஸ் செய்யப்படுகிறது என்றார்.