அரியானா அரசு இஸ்லாமிய இன அழிப்பில் ஈடுபட்டுள்ளது: வன்னியரசு

அரியானா அரசு இஸ்லாமிய இன அழிப்பில் ஈடுபட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார்.

இதுகுறித்து வன்னியரசு டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

அரியானா மாநிலத்தில் நூஹ் மாவட்டத்தில் சமீபத்தில் பஜ்ரங்தள் நடத்திய பேரணியில் இஸ்லாமிய குடியிருப்புகள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலில் இஸ்லாமியர்களின் வீடு, கடை, வணிக வளாகங்கள் என அனைத்தும் பஜ்ரங் தள் வன்முறை கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டன. அரியானா பாஜக அரசின் காவல்துறை முன்னிலேயே வன்முறை அரங்கேறியது. கலவரக்காரர்களிடமிருந்து தங்கள் உடைமைகளை பாதுகாக்க போராடியவர்கள் மீதும், தாக்குதலில் பாதிப்புக்குள்ளான இஸ்லாமியர்கள் மீதும் தற்போது அரச பயங்கரவாதம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நூஹ் நகரில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்த இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளை சட்டவிரோத ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி வருகிறது பாஜக அரசு. புல்டோசர் நடவடிக்கை என்பது சிகிச்சை நடவடிக்கையின் ஒரு பகுதி என்று கருத்து சொன்னார் அரியானா மாநில உள்துறை அமைச்சர் அணில் விஜ்.

இந்த நிலையில் அரியானா பாஜக அரசின் சட்டவிரோத புல்டோசர் நடவடிக்கை குறித்து செய்தித்தாள் செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை எடுத்தது பஞ்சாப் – அரியானா மாநில உயர்நீதிமன்றம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்தாவாலியா மற்றும் ஹர்பிரீத் கௌர் ஜீவன் அமர்வு அரியானா பாஜக அரசு குறித்து கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. சட்டம் – ஒழுங்கு என்ற பெயரில் எந்தவித சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இடிப்பு நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருவதாக செய்தித்தாள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், குறிப்பிட்ட சமூகத்தினரின் கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்படுகிறதா என்பதும், மாநில அரசால் இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என்பதும் இந்த சம்பவத்தில் பார்க்க வேண்டியுள்ளது என்று மிகக் கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ள நீதிமன்ற அமர்வு, சட்டவிரோத புல்டோசர் நடவடிக்கைக்கு உடனடி தடை விதித்தும், வரும் 11 ஆம் தேதி மாநில அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அரியானா அமைச்சர் அணில் விஜ் தெரிவித்த கருத்து செய்தித்தாளில் வந்துள்ளதாகவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஒருபுறம் மணிப்பூரில் கிறிஸ்தவ பழங்குடிகளின் இனவழிப்பு அரங்கேறி வரும் நிலையில் ஒன்றிய – மாநில இரட்டை என்ஜின் பாஜக அரசை நம்பாமல், மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி இல்லை என்று கருத்து தெரிவித்தது உச்சநீதிமன்றம். மேலும், தனியே நிவாரண பணிகளை மேற்பார்வை செய்ய முன்னாள் பெண் நீதிபதிகளை கொண்ட குழுவை அமைத்துள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட். இப்போது அரியானா மாநில பாஜக அரசு இஸ்லாமிய இனவழிப்பில் ஈடுபட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது உயர்நீதிமன்றம். தாமதமாகவேணும் நீதிமன்றங்கள் விழித்துக் கொண்டு மக்களை பாதுகாக்க களத்தில் இறங்கி இருப்பது நம்பிக்கையை தந்துள்ளது. நமக்கிருக்கும் கவலை என்னவென்றால் சனாதன கும்பல் நாடு முழுவதும் அரங்கேற்றி வரும் இஸ்லாமிய இனவழிப்புக்கும் இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று ஓம் தமிழர் சீமான் பேச போகிறாரா? என்பது தான். தங்கள் சித்தாந்த தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் குறித்து கேள்வி எழுப்பினால் சீமானுக்கு கோபம் வருவது நியாயம் தானே? ஓம் தமிழர் கும்பலிடமிருந்து விரைவில் ஜெய்ஶ்ரீராம் முழக்கம் வந்தாலும் ஆச்சரியமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.