மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது: அமித்ஷா

அரசியல் உள்நோக்கோடு மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளும் ஒன்றிய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான இரண்டாவது நாள் விவாதம் காரசாரத்துடன் இன்று நடைபெற்று வருகிறது. மணிப்பூருக்கு மோடி போகாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி, மணிப்பூரை மோடி இரண்டாக உடைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இந்நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1947ல் சுதந்திரமடைந்ததற்கு பிறகு பிரதமர் மோடி அரசு மட்டுமே அதிக மக்களின் நம்பிக்கையை வென்றது. மக்களும், நாடாளுமன்றமும் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளன. மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக அரசு 2 முறை வெற்றி பெற்றுள்ளது. எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் மக்கள் இரண்டு முறை தேர்வு செய்தனர். குடும்ப அரசியல், எதிர்ப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி அகற்றி உள்ளார். மக்களின் அன்பை பெற்ற பிரதமராக மோடி உள்ளார். 2014-ம் ஆண்டு முதல் வளர்ச்சிக்கான இந்தியாவை நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார்.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் தேசத்தின் மனநிலையை பிரதிபலிக்கவில்லை. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் உண்மையான குணத்தை அம்பலப்படுத்தும். அதிகாரத்தை கைப்பற்றுவது தான் காங்கிரஸின் உண்மையான நோக்கம். காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது. சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக; வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ். நடப்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்; மக்களுக்கு அனைத்தும் தெரியும். நரசிம்மராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதாயத்தை காட்டியே காங்கிரஸ் தோற்கடித்துள்ளது.

வாஜ்பாய்க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது பாஜக அதை செய்யவில்லை. மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அரசுக்கு எதிராக முதன்முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக நேர்மையாக எதிர்கொள்ளும். அரசியல் உள்நோக்கத்துடன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மோடி பிரதமரான பிறகே கோடிக்கணக்கான ஏழை மக்கள் வளர்ச்சியை கண்டனர். பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக பாடுபட்டு வருகிறார். மோடி ஆட்சிக்கு வந்தபிறகே சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி அதிக பெண்கள் சமைக்க தொடங்கினர்கள்.

பிரதமர் மோடி ஏறத்தாழ 9 கோடி ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்கியுள்ளார். 11 கோடி கழிவறைகள் நாடு முழுவதும் மோடி ஆட்சியில் கட்டப்பட்டுள்ளன. நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி ஓய்வில்லாமல் நாளொன்றுக்கு 17 மணி நேரம் உழைத்து வருகிறார். விவசாயிகள் நலனுக்காக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கி வருவது மோடி அரசுதான். 2004- 2014 வரை ரூ.70,000 கோடி விவசாய கடன் காங்கிரஸ் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் மோடி ஆட்சியில் விவசாயிகள் கடன் வாங்க அவசியமே ஏற்படவில்லை. 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கோடியை பிரதமர் நேரடியாக வழங்கியுள்ளார்.

விவசாயிகளிடம் காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. காங்கிரஸை போல் ஊழல் செய்யாமல் மக்களுக்கு சேர வேண்டிய உதவி தொகையை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளோம். ஜன்தன் திட்டம் மூலமாக ஒன்றிய அரசின் சலுகைகள் மக்களுக்கு நேரடியாக போய் சேருகிறது. ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அளவுக்கு இலவச மருத்துவ காப்பீடு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 5 லட்சம் பேருக்கு இன்சூரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கால சவால்களை ஒன்றிய அரசு மிக திறமையாக கையாண்டது. கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தவறான பிரசாரம் செய்தவர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ்.

தடுப்பூசி தான் நாட்டில் 30 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றியது. பொது முடக்கத்தை அமல்படுத்திய போது ஏழை மக்கள் எப்படி சாப்பிடுவார்கள் என கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமே அரசின் மீது நம்பிக்கை இல்லை. இலவச திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது எங்களின் நோக்கம் அல்ல. திட்டங்களுக்கு பெயர் வைத்தது மட்டுமே காங்கிரஸ் வேலையாக இருந்தது: ஆனால் செயல்படுத்தியது பாஜக தான். ராகுல் காந்தியின் செல்வாக்கை உயர்த்த 13 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒருவரை பிரதமராக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அது முடியவில்லை.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர ஆர்வமாக உள்ளது, நாங்கள் நாட்டுக்கு சேவை ஆற்றிவருகிறோம். மோடி ஆட்சியில் ஏழைகளுக்கான நிதி முழுமையாக சென்றடைகிறது: காங்கிரஸ் ஆட்சியில் அப்படி இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 1 ஒதுக்கினால் ஏழைகளுக்கு 15 பைசா மட்டுமே சென்றடைந்தது. உலக பொருளாதாரத்தில் இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது. நாட்டின் வளர்ச்சி எதிர்க்கட்சி கூட்டணிக்கு பிடிக்கவில்லை. கதி சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உட்புற கட்டமைப்பு பெரும் வலிமையடைந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும் 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலைகள் புதிதாக போடப்படுகின்றன. மோடி ஆட்சியில் முக்கியமான 7 துறைகளில் இந்தியா முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பிரதமர் மோடி எழுதி வருகிறார். இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் அறியும் வகையில் பிரதமர் மோடி செயல்படுகிறார். ஜி 20 மாநாடு நாடு முழுவதும் 55 இடங்களில் நடந்துள்ளது; இதன் மூலம் இந்தியாவின் பலத்தை உலக நாடுகள் புரிந்துகொண்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் ராணுவத்துறையில் அதிகபடியான ஊழல் நடந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் தீவிரவாதிகள் நாட்டிற்குள் நுழைந்தனர். பாஜக ஆட்சியில் தான் சீன எல்லை வரை சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் நமது வீரர்களின் தலைகளை கொய்தார்கள்; ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி நடக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதிலும் ஊழல் இருந்தது. தற்போது உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் தயாரிக்கப்படுவதால் எந்த ஊழலும் இல்லை. 90 இடங்களில் சோதனை நடத்தி பாப்புலர் ஃபிரன்ட் இயக்கத்துக்கு தடை விதித்தோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 4,000 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் வரை சென்று நமது ராணுவத்தினர் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தினர். ஐ.மு. கூட்டணி ஆட்சியில் மிகப் பெரிய அளவில் தீவிரவாதத் தாக்குதல்கள் அரங்கேறின. ராணுவ வீரர்களின் தலையைக் கொய்த தீவிரவாதிகள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.