தமிழக மாணவர்களுக்கு சின்னதாக ஓர் உதவி, சின்னதாக ஓர் ஊக்கமும் கொடுத்தால் போதும், அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். இதுபோன்ற தூண்டுதல்கள்தான், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண், அனைவருக்கும் ஐஐடி போன்ற திட்டங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக மாணவர்களுக்கு சின்னதாக ஓர் உதவி, சின்னதாக ஓர் ஊக்கம் கொடுத்தால் போதும், அடித்து தூள் கிளப்பிவிடுவார்கள். இதுபோன்ற தூண்டுதல்கள்தான், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப்பெண், அனைவருக்கும் ஐஐடி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
அரசுப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசுக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளும் நிர்வாக அமைப்பில் வேறுபாடு கொண்டதாக இருக்கலாம். ஆனால், தரத்தில் எல்லா கல்வி நிறுவனங்களும் ஒரே அளவுகோலுடன்தான் இயங்க வேண்டும். இந்த நிறுவனங்கள், அனைவருக்கும் பொதுவான நிறுனங்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சமச்சீர் நிலையைத்தான் உருவாக்கி வருகிறோம். நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில், இதுவரை தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், மிகக் குறைவான அளவில்தான் உயர் கல்விக்காக சென்றுள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். கல்வியிலும் இதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு.
குறிப்பாக, உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக கொண்டு வரப்பட்டதுதான் அனைவருக்கும் ஐஐடி திட்டம். தமிழகத்தின் எங்கோ இருக்கக்கூடிய, ஒரு கிராமத்தில் படித்த ஓர் அரசுப் பள்ளி மாணவரால், ஏன் இதுவரைக்கு ஐஐடி, என்எல்யு, நிப் போன்ற நாட்டின் முதன்மையான உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் இருந்தது என்றால், அதற்கென்று தனியாக சமூக பொருளாதார காரணங்கள் இருக்கிறது.
தமிழக மாணவர்களுக்கு நாட்டின் உயர் கல்வி நிறுவனங்கள் எவை? அங்கு நுழைய எப்படி விண்ணப்பிப்பது?, போட்டித் தேர்வுகளுக்கு படிக்கக்கூடிய முறை என்ன? இப்படியான பல தகவல்கள் சென்று சேராமல் இருந்தது. இப்போது அந்தப் பாதையை உருவாக்கி இருக்கிறோம். அதனால், இந்தாண்டு 225 மாணவர்கள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு செல்லப் போகிறார்கள். பள்ளிக் கல்வித்துறையின் கடுமையான முயற்சியால்தான் இது சாத்தியமானது. இவ்வாறு அவர் கூறினார்.