நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி: ஸ்மிரிதி இராணி

நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதும் அவரை குறுக்கிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசினார். இதில் தமிழ்நாடு பற்றி அவர் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்., சார்பில் அசாம் மாநில எம்.பி., கெளரவ் கோகாய் மீண்டும் முன்மொழிந்து நேற்று உரையை தொடங்கினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்., எம்.பி., ராகுல்காந்தி தொடங்கி வைத்து பேசுவதாக இருந்தது. ஆனால் ராகுல் நேற்று பேசவில்லை.

இதையடுத்து இன்று பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மணிப்பூர் அகதி முகாமில் ஒரு தாய், தன்னுடைய மகன் சடலத்துடன் ஒருநாள் முழுவதும் படுத்திருந்தேன் என தெரிவித்தார். நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். தொடர் வன்முறை சம்பவங்களால் மணிப்பூர் இன்று பிரிந்து நிற்கிறது. பாஜகவினர் பாரதமாதாவின் காவலர்கள் அல்ல, மாறாக அவளை கொலை செய்த கொலைகாரர்கள். இந்தியா என்ற கருத்தோட்டத்தை மணிப்பூரில் அழித்துவிட்டனர். நாடு முழுவதும் நான் மேற்கொண்ட ‘இந்திய ஒற்றுமை நடைபயணம்’ இன்னும் நிறைவடையவில்லை. நடைபயணத்தின்போது இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நிலை மோசமாக இருப்பதை உணர்ந்தேன்; விவசாயிகளின் வலியை பிரதிபலிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீங்கள் தேச துரோகிகள்.. தேச பக்தர்கள் இல்ல, என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

எதிர்பார்த்தபடியே நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதும் அவரை குறுக்கிட்டு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசினார். இதில் தமிழ்நாடு பற்றி அவர் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சில், நீங்கள் இந்தியா இல்லை, ஏனெனில் இந்தியா என்பது ஊழல் இல்லை. இந்தியா என்பது வாரிசு அரசியலில் நம்பிக்கை கொள்ளவில்லை. மாறாக இந்தியா என்பதை மெரிட் அரசியலை, தகுதியை விரும்புகிறது . உங்களைப் போன்றவர்கள் ஆங்கிலேயர்களிடம் சொன்னதை இன்று நினைவில் கொள்ள வேண்டும் – இந்தியாவிலிருந்து வெளியேறு. இந்தியா ஊழலிருந்து வெளியேறு , இந்தியா வாரிசு அரசியலில் இருந்து வெளியேறு, இந்தியா கூட்டணி இதில் இருந்தெல்லாம் வெளியேற வேண்டும். காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் மிக மோசமான பேச்சுக்கு எனது கண்டனங்களை தெரிவிக்கிறேன். எதிர்க்கட்சிகள் இந்தியா கிடையாது, நீங்கள் ஊழல்வாதிகள், ஊழலை கண்டுபிடித்தவர்கள். மணிப்பூர் பிரிக்கப்பட்டதாக, பிளவு அடைந்துவிட்டதாக ராகுல் காந்தி கூறினார். மணிப்பூரை பிரிக்க முடியாது. அது இந்தியாவின் ஒரு பகுதி. பிரிக்க முடியாது. நீங்கள் மணிப்பூரை பற்றி பேசும் முன் தமிழ்நாட்டை பற்றி பேசுங்கள். எங்களை பற்றி பேசும் முன் உங்கள் கூட்டணி திமுக பற்றி பேசுங்கள். ஊழலை பற்றி பேசும்போது, உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள். நீங்கள் இந்தியாவிற்கு ஊழலை அறிமுகம் செய்த கட்சி. தமிழ்நாட்டில் உங்கள் கூடவே இருக்கும் திமுகவை பாருங்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பண்டீட்டுகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அவர்களுக்கு எப்போது நீதி வழங்குவீர்கள்., என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி பேசினார்.