பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 2-ம் நாளாக புதன்கிழமையும் விவாதம் தொடர்ந்தது. இதில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, என்சிபி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசினர். இதற்கு பதில் அளித்து மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் பேசினர்.
இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று வியாழக்கிழமை நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துப் பேசினார். நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு பிரதமர் மோடி பதிலளித்துக் கொண்டிருந்தபோதே ராகுல் காந்தி, சோனியா காந்தி வெளியேற, அவர்களுடன் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. வெளியே வந்த சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் வெளிநடப்பு குறித்து கேள்வி எழுப்ப முயற்சிக்க அவர், “என் கட்சி இது குறித்து விளக்கும். பிரதமர் மணிப்பூர் பிரச்சினை பற்றி பேசவே இல்லை” என்றார்.
பின்னர் வெளிநடப்பு குறித்து காங்கிரஸ் பகிர்ந்த டுவீட்டில், “இன்னும் அந்தக் கேள்விகளுக்கான விடை கிடைக்கவில்லை. 1. கலவரம் நடந்து 100 நாட்கள் கடந்தும் பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை?. 2. மணிப்பூர் பற்றி பிரதமர் மவுனம் கலைக்க 80 நாட்கள் எடுத்துக் கொண்டது எதற்காக?. 3. இத்தனை வன்முறைக்குப் பின்னரும் கூட மணிப்பூர் முதல்வர் பதவி நீக்கம் செய்யப்படாதது ஏன்?” என்று மூன்று கேள்விகளை பட்டியலிட்டுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால், மணிப்பூர் கலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அந்தத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக மக்களவையில் அறிவிக்கப்பட்டது.