நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசி முடித்த ராகுல் காந்தி ‛பிளையிங் கிஸ்’ கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெண் எம்பி பிரியங்கா சதுர்வேதி சதுர்வேதி, ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பாஜகவுக்கு பாடமெடுத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று 2வத நாளாக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். மணிப்பூரை பாஜக இரண்டு துண்டாக்கி உள்ளது. பிரதமர் மோடி மணிப்பூருக்கு இன்னும் செல்லவில்லை. மணிப்பூரில் பாரதமாதாவை கொலை செய்துள்ளீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல. தேசத்துரோகிகள் என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ராகுல் காந்தியின் பேச்சுக்கு நடுவே மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடும் அமளி நடந்தது. இறுதியில் ராகுல் காந்தி பேசி முடித்து ராஜஸ்தானில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அப்போது அவர் எதிர்க்கட்சி தலைவர்களை பார்த்து ‛பிளேயிங் கிஸ்’ கொடுத்து சென்றார்.
இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர், ‛‛எனக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டவர் (ராகுல் காந்தி) சபையில் இருந்து வெளியேறும் முன்பு அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். பெண் எம்பிக்கள் அமரும் நாடாளுமன்ற சபையில் பிளையிங் கிஸ் கொடுத்துள்ளார். பெண் மீது வெறுப்பு கொண்ட ஆண் ஒருவரால் தான் இதுபோன்று செய்ய முடியும். நாடாளுமன்றத்தில் இதுபோன்று கண்ணியமற்ற நடத்தையை நான் இதுவரை பார்த்ததே இல்லை” என விமர்சனம் செய்தார். மேலும் பாஜக பெண் எம்பிக்கள், மத்திய அமைச்சர்கள் சார்பில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் அளிக்கப்பட்டது. பிளேயிங் கிஸ் கொடுத்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தான் மணிப்பூர் விவகாரத்தை திசைதிருப்பவே பாஜக ராகுல் காந்தியின் பறக்கும் முத்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதற்கிடையே தான் காங்கிரஸ் அல்லாத மாற்று கட்சியான உத்தவ் தாக்கரே சிவசேனாவை சேர்ந்த ராஜ்யசபா பெண் எம்பி பிரியங்கா சதுர்வேதி, ராகுல் காந்தியின் பறக்கும் முத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. அது அன்பின் வெளிப்பாடாக தான் இருக்கிறது என அவர் தெரிவித்து பாஜகவுக்கு பாடமெடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தி பேசியபோது அனைத்து அமைச்சர்களும் எழுந்து நின்று இடையூறு செய்தனர். அவர் பாசத்தோடு அன்பின்(லவ்) வெளிப்பாடாக சைகை செய்தார். இதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை?. அன்பின் வெளிப்பாடாக காட்டப்படும் சைகைகளை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பாஜகவினருக்கு வெறுப்புணர்வு உள்ளது. உண்மையிலேயே பாஜகவினர் வெறுப்புணர்வுக்கு பழகிவிட்டனர் என நினைக்கிறேன். இதனால் தான் அன்பை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் ராகுல் காந்தி அப்படியில்லை. எம்பியாக தகுதி நீக்கம் செய்து சபையில் இருந்து வெளியேற்றினாலும் கூட அதனை எதிர்த்து போராடி வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டு வந்துள்ளார். இருப்பினும் அவர் எந்த வகையிலும் உங்களுடன் வெறுப்பை காட்டவில்லை” என சாடியுள்ளார். தற்போது உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் செயல்பட்டு வரும் பிரியங்கா சதுர்வேதி இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.