பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு!

இந்திய தண்டனை சட்டத்தை மொத்தமாக மாற்றி இனி பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்துள்ளார்.

இந்தியாவில் போலீஸ், கோர்ட் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் கடைபிடிக்கப்பட்டு வரும் மொத்த தண்டனை சட்டமும் இதன் மூலம் மாற்றப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா ஆகியவை இனி கடைபிடிக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த மசோதாக்கள் அறிவித்துள்ளன. இந்த சட்டங்களின் பெயர்கள் மட்டும் மாற்றப்படவில்லை. உள்ளே இருக்கும் பல அடிப்படை கூறுகள், அடிப்படை அமைப்புகளும் மாற்றப்பட்டு உள்ளன.

இந்த மூன்று சட்டங்கள்தான் ஒரு நபரை கைது செய்வது, அவரை விசாரிப்பது, வழக்குகளை நடத்துவது, குற்றங்களை கண்காணிப்பது, சாட்சியங்களை விசாரிப்பது என்று பல விஷயங்களை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. முக்கியமாக இந்திய தண்டனைச் சட்டம் இந்தியா முழுக்க போலீசார் மூலம் பயன்படுத்தப்படும் சட்டம் ஆகும். ஆனால் இப்போது இதை மொத்தமாக மாற்றி அமித் ஷா மசோதா கொண்டு வந்துள்ளார். இனி ஐபிசி குற்றப்பிரிவு என்ற சொற்றொடர் இருக்காது. அதோடு இல்லாமல் இனி அந்த சட்டத்தில் இருக்கும் பல கூறுகளும் மாற்றப்படும். இப்போது நாம் பின்பற்றும் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்டவை. ஆனாலும் இதில் பல மாற்றங்கள் இடை இடையே செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையத்தில் தற்போது மொத்தமாக இதன் பெயர், கூறுகளை மாற்றி திருத்த மசோதாவை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.

அவரின் இந்த மசோதா கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக இதில் பல புதிய சட்டங்களும், விதிகளும் சேர்க்கப்பட்டு உள்ளன. பல பக்கங்கள் அடங்கிய மசோதா இது என்பதால் இதில் இருக்கும் புதிய சட்டங்கள் குறித்த விவரங்கள் இனி ஒன்று ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்த சட்டங்களில் பிரிவினைச் செயல்கள், ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பது தொடர்பான புதிய குற்றம் ஒன்றும் சட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் விதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. நாடு முழுக்க பல இடங்களில் பாஜகவிற்கு எதிராக போராட்டங்கள் நடக்கும் நிலையில்தான் ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இந்தியாவின் இறையாண்மை தொடர்பான புதிய சட்ட விதிகள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த சட்ட திருத்த மசோதா மூலம் இதுவரைக்கும் நாம் பயன்படுத்தி வந்த அடிப்படை தண்டனை விதிகள் மொத்தமாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.