மணிப்பூர் பற்றி எரிகிறது, மக்களவையில் பிரதமர் மோடி ஜோக் அடிக்கிறார்: ராகுல்

மணிப்பூர் பற்றி எரியும்போது, நாடாளுமன்ற மக்களவையில் நகைச்சுவையாகப் பேசுவதா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றினார். இந்நிலையில், புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நகைச்சுவையாகப் பேசியதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி மேலும் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதைக் கேட்டேன். அவர் நகைச்சுவையாகப் பேசுகிறார்; சிரிக்கிறார்; தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் ஆதரவு கோஷங்களை எழுப்புகின்றனர். ஒரு பிரதமருக்கு இது அழகல்ல. மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார்.

நான் கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எல்லா மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால், மணிப்பூரில் நாங்கள் பார்த்ததை வேறு எங்கும் பார்க்கவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதை நான் தற்போது சொல்ல வேண்டும். நாங்கள் மேத்தி சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றபோது, அந்த இடத்திற்கு குகி சமூக மக்களை அழைக்காதீர்கள் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அங்கு வந்தால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என கூறினார்கள். இதே நிலைதான் குகி மக்கள் வசிக்கும் இடத்திலும் இருந்தது. மணிப்பூர் குகி, மைத்தி என இரண்டாக பிரிந்திருக்கிறது. அது ஒரு மாநிலமாக இல்லை. இதைத்தான் நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன்.

மணிப்பூரில் நிலைமையையைக் கட்டுப்படுத்த பிரதமர் நினைத்திருந்தால் முடிந்திருக்கும். அதற்கான பல்வேறு கருவிகள் அவரிடம் உள்ளன. ஆனால், பிரதமர் தனது கடமையைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் அவர் சிரித்து சிரித்துப் பேசுகிறார். பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்றிருக்க வேண்டும்; அங்குள்ள மக்களோடு பேசி இருக்க வேண்டும். பிரதமராக இருப்பவர் ஒரு சாதாரண அரசியல்வாதியைப் போல பேசக்கூடாது. காங்கிரஸ் குறித்தும் எதிர்க்கட்சிகள் குறித்துமே பிரதமர் மோடி 2 மணி நேரம் பேசியதைப் பார்த்தது ஒரு பெரிய துயரம். அவர் தனது பதவிக்கு நியாயம் சேர்க்கவில்லை. மணிப்பூர் விஷயத்தில் பிரதமர் வேண்டுமென்றே தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டார் என்பதுதான் எனது முடிவு.

அவர் ஏன் மணிப்பூருக்குச் செல்லவில்லை என்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. ராணுவத்தைக் கொண்டு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டி இருக்க வேண்டும் என்பதல்ல எனது கருத்து. இரண்டு நாட்களில் ராணுவத்தால் அமைதியை ஏற்படுத்தி இருக்க முடியும் என்பதுதான் எனது கருத்து. ஆனால், பிரதமர் எந்த கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவது எனது நிலைப்பாடு அல்ல.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மணிப்பூரில் பாரத அன்னையை கொலை செய்துவிட்டதாக குறிப்பிட்டேன். மணிப்பூர் இன்று ஒரே மாநிலமாக இல்லை. இரண்டு மாநிலமாக பிளவுபட்டு கிடக்கிறது. அதனால்தான் மணிப்பூரில் பாஜக, பாரத அன்னையை கொலை செய்துவிட்டது என்று குறிப்பிட்டேன். பிரதமர் மோடி மணிப்பூர் மக்களை, பெண்களை கிண்டல் செய்கிறார். நான் பல பிரதமர்களை பார்த்து இருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு பிரதமரை பார்த்ததில்லை. பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என்பது எனக்கு தெரியும், ஆனால் பொதுவெளியில் சொல்ல இயலாது. பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விவாதம் பிரதமர் பற்றியது அல்ல, மணிப்பூரை பற்றியது. நான் பேசிய பாரத மாதா என்ற வார்த்தைகள் பாராளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் என்ன நடக்கிறது என்று பிரதமருக்கு தெரியவில்லை.

மணிப்பூர் மாநிலத்தில் நான் கேட்டது, பார்த்தது எல்லாம் அசாதாரணமானது. மணிப்பூரில் அரசு ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதை மாநில முதலமைச்சரால் தடுக்க முடியவில்லை. மணிப்பூரில் நடப்பவற்றை இந்திய ராணுவத்தால் 2 நாட்களில் நிறுத்த முடியும். எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்வதன் மூலம் எங்கள் நடவடிக்கையை நிறுத்த முடியாது. மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த தேவையான அனைத்தும் பிரதமரிடம் உள்ளன. ஆனால் அதனை செய்ய மறுக்கிறார் பிரதமர் மோடி. பிரதமரின் கைகளில் பல சாதனங்களும் கருவிகளும் உள்ளன. ஆனால் அதனை அவர் பிரயோகிப்பதில்லை. பாரத அன்னை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். பாராளுமன்றத்தில் 2 மணி நேரமாக உரையாற்றிய பிரதமர் மோடி மணிப்பூர் குறித்து 2 நிமிடங்கள் மட்டுமே பேசினார். பிரதமர் என்பவர் கட்சி தலைவரை போன்று அரசியல் செய்ய கூடாது. பிரதமர் பொதுவானவராக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.