திமுகவினரின் பகல் வேஷத்தால் நடந்த உண்மைகளை மறைக்க முடியாது என்றும், இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு மூத்த அமைச்சர் ஜெயலலிதாவின் சேலையில் கை வைத்து இழுத்தார் என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆவேசமாகப் பேசிய திமுக எம்.பி கனிமொழி, மணிப்பூரில் திரௌபதியின் சேலைகள் உருவப்படுவதாக பேசியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் பேசுகையில், “அன்று 1989ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து இழுத்தவர்கள் திமுகவினர். இன்று திரௌபதி குறித்துப் பேசுகிறார்கள்” என விமர்சித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள். முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்று முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு சட்டமன்றத்திலேயே பேசியது அவைக்குறிப்பில் உள்ளது. நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ்அப் வரலாற்றைப் படித்துவிட்டுப் பேசுவார்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
1989ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் மிகப்பெரிய கரும்புள்ளியாக கருதப்படும் ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்ட நாள். அன்று தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த தினம். அன்றைய தினம் தமிழக சட்டமன்றத்தில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராக விளங்கிய ஜெயலலிதாவை ஒரு பெண் என்றும் பாராமல் வரலாற்றிலே எங்கும் கண்டிராதவகையில் திமுகவினரால் மிகப்பெரிய கொடுமை இழைக்கப்பட்டது. அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அன்றைக்கு தோழமை கட்சியை சேர்ந்த குமரி ஆனந்தன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். அதாவது காவல்துறையை தன் வசம் வைத்து இருந்த அன்றைய முதல்வர் கருணாநிதி செய்த சட்ட மீறல்களை சுட்டிக் காட்டி அதை முதலில் விவாதிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.
அதாவது ஜெயலலிதா எழுதிய ஒரு கடிதத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று கருதி 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி அதிகாலை எந்தவித காரணமும் சொல்லாமல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள எனது இல்லத்தில் சட்டத்திற்கு புறம்பாக உள்ளே நுழைந்து தமிழக காவல்துறையினர் சோதனை என்ற பெயரில் வீட்டில் வைத்து இருந்த ஆவணங்களை எல்லாம் எடுத்து சென்றனர். இதை செய்யச் சொன்னவர் அன்றைய முதல்வர் பொறுப்பில் இருந்த கருணாநிதி. அவர்தான் அன்றைக்கு காவல்துறையையும் கையில் வைத்து இருந்தவர். இது போன்று கருணாநிதியால் அன்றைக்கு அரங்கேற்றப்பட்ட நடவடிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒருவர் எழுப்பியதை சற்றும் எதிர்பார்க்காத கருணாநிதி, தான் செய்த தவறுகள் எங்கே வெளி வந்துவிடுமோ என்ற பயத்தில் சட்டசபையில் பிரச்சனையை திசை திருப்ப முயன்றார். அப்போது தனக்கு எதிரே அமர்ந்து இருந்த ஜெயலலிதாவை நா கூசும் வார்த்தைகளால் வசைபாடுகிறார்.
அதனைத் தொடர்ந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தோழமை கட்சி உறுப்பினர்களும் அன்றைய அவைத்தலைவர் தமிழ்க்குடிமகனிடம் அவையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். கருணாநிதி செய்த அத்துமீறல்கள் வெளிப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக ஜெயலலிதாவை கொலைவெறியோடு தாக்கினர். இதை கண்டு முதலாவதாக திமுகவை சேர்ந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் டி கே.பழனிசாமி என்பவர் மேஜை மீது ஏறி ஜெயலலிதாவை தோள் பட்டையில் ஓங்கி உதைத்து அடிக்க பாய்கிறார். அப்போது கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் இன்றைக்கு தமிழக அமைச்சராக இருப்பவர் தரையில் கூட நடக்காமல் மேஜை மீது ஏறி விலங்குகள் மரக்கிளைகளில் தாவுவது போல் ஒவ்வொரு மேஜையாக தாவித் தாவியே ஜெயலலிதா அருகில் வந்து வேட்டியை மடித்துக் கட்டி ஜெயலலிதாவின் தோள் பட்டையில் எட்டி உதைக்கிறார்.
அப்போது நிலை தடுமாறி நாற்காலியில் சாய்ந்த ஜெயலலிதா மீண்டும் எழுந்து நியாயம் வேண்டும் நியாயம் வேண்டும் என்று தொடர்ந்து கோஷம் போட்டுக்கொண்டே நிற்கிறார். அதன்பிறகு கோவை மு.கண்ணப்பன் ஓடி வந்து தாக்குகிறார். வீரபாண்டி ஆறுமுகம் ஜெயலலிதாவின் முடியைப் பிடித்து இழுக்கிறார். ஜெயலலிதா மீது புத்தகங்களை எறிந்து தாக்குகிறார்கள். அச்சமயம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் ஆகியோர் ஜெயலலிதா மீது புத்தகங்கள் விழாமல் இருப்பதற்காக எழுதும் அட்டையை வைத்து மறைத்து பாதுகாக்கிறார்கள். அப்போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து இருந்த திமுகவை சேர்ந்த நிர்வாகி, இன்றைக்கு நாடளுமன்ற உறுப்பினராக இருப்பவர். கழகத்தினர் அனைவரையும் தாக்கச் சொல்லி கத்துகிறார். உடனே அங்கு இருந்த பொன்.முத்துராமலிங்கம், அவைத்தலைவர் மேஜையில் இருந்த பித்தளை மணியை எடுத்து ஜெயலலிதா மீது வேகமாக வீசுகிறார். கடவுளின் அருளால் ஜெயலலிதா தலையில் அது விழாமல் உயிர்பிழைத்தார். இந்த கலவரத்திற்கிடையில் இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற ஒரு மூத்த அமைச்சர் ஜெயலலிதாவின் சேலையில் கைவைத்து இழுத்தார். ஈவு இரக்கமின்றி ஜெயலலிதாவின் ஆடையை கிழித்து அசிங்கப்படுத்திய கொடூரர்கள்தான் இன்றைக்கு பகல் வேஷம் போடுகின்றனர்.
இதை தற்போது நாடகம் என்று சொல்லி திமுகவினர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால் நடந்தவை அனைத்தையும் சட்டப்பேரவையில் நின்று நேரில் வேடிக்கை பார்த்தவர் தான் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் ஒன்றுமே அறியாதவராக நிகழ்ந்த உண்மைகளை மறைக்கப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? நடந்த உண்மைகள் அத்தனையும் இன்றைக்கும் தமிழக சட்டப்பேரவை குறிப்புகளிலும், அன்றைய காலகட்டங்களில் வெளிவந்த பத்திரிகைகளிலுமே சாட்சியாக இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக ஜெயலலிதா எனது உடன் பிறவா சகோதரியாக என்னிடம் நடந்ததை அனைத்தையும் சொன்னதைத்தான் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறேன். திமுகவினர் என்றைக்குமே பெண்களை மதிக்க மாட்டார்கள். அதை இன்றைக்கும் திமுகவில் இருக்கும் அமைச்சர்களே ஒவ்வொரு நாளும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் திமுகவின் அடக்குமுறைகளை வேரறுத்து அனைத்தையும் எதிர்கொண்டு தான் கட்சியையும் ஆட்சியையும் கொண்டு சென்றோம். இவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில்தான் தமிழகத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி காட்டினோம். குறிப்பாக பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும் எங்களது செயல்பாடுகள் அமைந்து இருந்தன. அதே வழியில்தான் நானும் இன்றுவரை பயணித்துக் கொண்டு இருக்கிறேன். எனவே திமுகவினர் பச்சைப் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். உண்மைகளை மறைத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். உண்மைக்கு வலிமை அதிகம். அது என்றாவது ஒரு நாள் வெளியில் வந்தே தீரும். ஏதோ விதிவசத்தால் இன்று ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள். இதை நினைவில் வைத்துக் கொண்டு ஆட்சியில் இருக்கும் வரையாவது தமிழகத்திற்கு ஏதாவது நல்லதை செய்ய முயற்சியுங்கள் என்பதை இந்த ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.