சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் ஆக.7-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து அன்று இரவே புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினா்.
இந்நிலையில், ஆக.12-ம் தேதியான இன்றுடன் செந்தில் பாலாஜியின் காவல் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணையில் துன்புறுத்தல்கள் ஏதேனும் கொடுக்கப்பட்டதா? என்று செந்தில் பாலாஜியிடம் நீதிபதி கேட்டார். அதற்கு செந்தில்பாலாஜி அப்படியான துன்புறுத்தல்கள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறினார். மேலும் 5 நாட்கள் நடத்திய விசாரணை குறித்த குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் லிஃப்ட் ஏறி வந்த செந்தில் பாலாஜி வழக்கு முடிந்து செல்லும் பொழுது படிக்கட்டில் இறங்கி நடந்து சென்றார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கையை அசைத்த படி செந்தில் பாலாஜி சென்றார். நீதிமன்ற காவலில் இருப்பதால் எதுவும் பேச முடியாது என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் பரணிதரன் விளக்கம் அளித்தார். ஜாமீன் கோரி பத்தாம் தேதிக்கு பிறகு மனு தாக்கல் செய்யப்படும் என செந்தில் பாலாஜி வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ தகவல் தெரிவித்து இருக்கிறார்
அமலாக்கத்துறை சார்பில் கூடுதலாக விசாரணை நடத்த கால அவகாசம் கேட்க வில்லை என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் தகவல் தெரிவித்திருக்கிறார். செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை 3000 முதல் 4000 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. செந்தில் பாலாஜி தொடர்பான குற்றப்பத்திரிகை ஆவணங்கள் இரும்பு டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே குற்ற பத்திரிக்கையில் இடம் பெற்றிருப்பதாகவும் அவர் பெயர் தவிர வேறு யார் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் முக்கிய இடம் பெறவில்லை என அமலாக்கத்துறை வழக்கறிஞர் தகவல் தெரிவித்திருக்கிறார்.