திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின மீதான விவாதத்தின் போது, மணிப்பூரில் 2 இளம்பெண்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் பேசினர். அப்போது பேசிய எம்.பி. கனிமொழி, 2 பெண்கள் நிர்வாணம் ஆக்கப்பட்ட சம்பவத்தையும், மகாபாரதத்தில் திரெளபதி சேலை உருவப்பட்ட சம்பவத்தையும் ஒப்பிட்டு பேசினார். இந்த சூழலில், இதற்கு பதிலடி கொடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை உருவிய கட்சியான திமுக, இன்றைக்கு பெண்களின் கவுரவத்தை பற்றி பேசுகிறீர்களே.. உங்களுக்கு வெட்கமாக இல்லை?” என்று கடுமையாக விமர்சித்தார்.
நிர்மலா சீதாராமன் பேசியது மீண்டும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. எல்லாமே ஜெயலலிதா வீட்டில் முன்னராகவே நடத்தப்பட்ட நாடகம் என்றும் திருநாவுக்கரசர் கூறியதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மறக்க முடியாத நாள். தமிழக மக்களுக்கும்தான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த தி.மு.க அரசுக்கு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். சட்டசபையே அமளி துமளியானது. சட்டசபையில் இருந்து வெளியேறிய ஜெயலலிதா, ”துரைமுருகன் எனது சேலையை பிடித்து இழுத்து கிழித்தார். அப்போது கீழே விழுந்ததில் எனது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலமைச்சர் கருணாநிதி மிகவும் ஆபாசமாக ஒரு வார்த்தையைச் சொல்லித் திட்டினார். தி.மு.க-வினர் என்னுடைய தலையைக் குறிபார்த்து தாக்குதல் தொடுத்தனர் என்று குற்றம் சாட்டினார். 2003 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி பட்ஜெட் விவாதத்தின் போது மீண்டும் அந்த பிரச்னை காரசார விவாதமானது. அப்போது பேசிய ஜெயலலிதா, ”இதே சட்டசபையில் எம்.ஜி.ஆர் தாக்கப்பட்டார். அவர் மீது செருப்புகள் வீசப்பட்டன. 1989 ஆம் ஆண்டு சட்டசபையில் துரைமுருகன் என் சேலையை பிடித்து இழுத்தார். என் சேலை கிழிந்துவிட்டது. அப்போது நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டேன். ஆளும்கட்சியினர் அப்போது என்னிடம் கண்ணியமாக நடந்து கொள்ளவில்லை என்று கூறினார். அதற்கு துரைமுருகன், ”நீங்கள் கூறுவது தவறு. நான் உங்களைத் தாக்கவே இல்லை. நீங்கள் கூறும் இடத்தில் இருந்து நான் அதிக தூரத்தில் இருந்தேன் என்றார். அதற்கு ஜெயலலிதா, அங்கே இருந்திருக்கலாம். ஆனால், இடத்தை விட்டு முன்னேறி வந்து என்னைத் தாக்கினீர்கள். அவமானகரமாக நடந்துகொண்டீர்கள். வீரபாண்டி ஆறுமுகம் மேஜை மீது ஏறி என்னை நோக்கி ஓடிவந்தாரே..? என்று கேட்டதற்கு, துரைமுருகனோ, கிரிமினல் முதல்வர் என்றும் குத்துங்கடா என்றும் நீங்கள்தான் சொன்னீர்கள். எங்கள் தலைவரை அதிமுகவினர் உடனே தாக்கினர். அடித்து கண்ணாடியை உடைத்தனர் என்று கூறினார். இந்த சம்பவம் நடந்து சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த சம்பவம் தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் கூறுகையில், தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாடாளுமன்றத்தில் திமுகவை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கிழிகிழி என கிழித்துவிட்டார்கள். கொஞ்சம் நஞ்சம் கிழி அல்ல. திமுக ஒரு ஊழல் கட்சி.. அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து கொள்ளையடித்த கட்சி என ஒரு நாட்டின் பிரதமரே நாடாளுமன்றத்தில் பேசி, திமுகவின் லட்சணத்தை உலகம் முழுக்க அறிய செய்துவிட்டார். சும்மா கிழி கிழினு கிழிச்சு தொங்கவிட்டிருக்காரு திமுகவை. அந்த வகையில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.
அது மட்டுமல்லாமல், அம்மாவுக்கு (ஜெயலலிதா) நேர்ந்த கொடுமையை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார். 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி அம்மாவின் சேலையை பிடித்து இழுத்து எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தி, கேவலப்படுத்தியவர்கள்தான் திமுகவினர். குறிப்பாக, இன்றைக்கு அமைச்சராக இருக்கக்கூடிய துரைமுருகன் தான் அன்று அம்மாவின் சேலையை பிடித்து இழுத்தார். அதனால்தான் துரைமுருகனை நாங்கள் துச்சாதனன் என்றே அழைத்து வந்தோம். அவரையும், திமுகவை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.