அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரி மாவட்டம் வழியாக சென்றபோது பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். பின்னர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை சேலம் பயணப்பட்டார். அங்கு சென்ற அவர் சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு பள்ளி செயல்பட அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். இதனை அடுத்து கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும் பொழுது திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இதனையறிந்த அமைச்சர் சக்கரபாணி, திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் திமுகவினர் அவரை பார்ப்பதற்கு மருத்துவமனை வந்தனர். அங்கு சில மணி நேர ஓய்வுக்கு பின் தனியார் மருத்துவமனையிலிருந்து பெங்களூரு நாராயணா இருதாலயா மருத்துவமனைக்கு புறப்பட்டுச்செல்வதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
தற்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பெங்களூர் மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மாரடைப்பு தொடர்பான அறிகுறிகள் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், திமுகவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.