நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஒருபோதும் கையெழுத்திடமாட்டேன் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ’எண்ணித் துணிக’ என்ற தலைப்பில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயராகும் மாணவர்கள் மற்றும் பல்வேறு உயர் கல்வி கற்கும் மாணவர்களை அழைத்து தொடர் நிகழ்வுகளை நடத்தி வருகிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு 4 முறை இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் இந்த முறை இந்நிகழ்ச்சிக்கு இன்று சனிக்கிழமை அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, 2023-ம் ஆண்டில் நீட் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
அப்போது சேலத்தைச் சேர்ந்த மாணவரின் தந்தை ஒருவர், “தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நிறைய மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இருப்பினும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஆளுநர், “நீட் தேர்வுக்கு தடை கோருவதை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மாட்டேன். இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான், அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
பள்ளியில் படிக்கும்போதே, ஆழமாக கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றி பெறலாம். ஒவ்வொரு முறையும், நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது மாணவர்களின் கற்றல் திறனையே கேள்விக்குறியாக்கிவிடும். அதேபோல், நீட் தேர்வு குழுவின் அறிக்கையின்படி, நீட் தேர்வு நடைமுறைக்கு வரும் முன்பு மருத்துவ மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதாகவே இருந்தது. நூற்றுக்கும் குறைவான மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவப் படிப்பை படித்துள்ளனர். ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபின்புதான், அதிகளவில் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளனர்” என்று அவர் பதிலளித்தார்.