அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக, 12 ஆம் வகுப்பு மாணவர் சின்னதுரை, அவரது சகோதரி மீது, மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்னையாக கண்டிக்கிறேன்.
பள்ளி மாணவர்களிடையே சாதிய சிந்தனையை தூண்டி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி பிரச்னைக்காக நடக்கும் கொடூர தாக்குதல்களை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் நான்குநேரியில் முன் விரோதம் காரணமாக விவசாயி வானுமாமலை என்பவரின், பெட்டிக்கடைக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் தீ வைத்து சேதப்படுத்தியதுடன், 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றது.
கலவர பூமியாக மாறியுள்ள நான்குநேரியில், பதற்றத்தை தணிக்கவும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றவும் தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது. இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.