பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது-
காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் விடாததால் டெல்டா பகுதியில் பயிர்கள் கருகி கிடக்கின்றன. தி.மு.க. அரசு தண்ணீர் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறதாம். இப்படியே எத்தனை நாள் தான் மக்களை ஏற்றுவீர்கள்? கர்நாடகத்தில் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி தானே நடக்கிறது. அவர்களிடம் பேசி தண்ணீர் பெற முடியாத நிலையில் தானே தி.மு.க. உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தராத கட்சியை தலை மீதும், தோள் மீதும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். தமிழகத்தை பா.ஜனதா வஞ்சிப்பதாக கூறும் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கூறுவாரா? நாங்கள் எந்த மாநிலத்தையும் பிரித்து பார்க்கவில்லை.
மணிப்பூரை பா.ஜனதா கண்டு கொள்ளவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இந்தியா கூட்டணி. ஆனால் இப்போது வாடும் பயிரை காப்பாற்ற இந்தியா கூட்டணி முன்வரவில்லையே. தமிழகம் இந்தியாவில் ஒரு மாநிலம் தானே. இந்த மாநிலத்தின் விவசாயம் அழிவதை இந்தியா கூட்டணி கண்டு கொள்ளவில்லையே. இப்படிப்பட்ட கூட்டணி தமிழகத்துக்கு தேவையா?
பா.ஜனதா மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதிமோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது. நாங்குனேரி சம்பவம் அதற்கு ஒரு சாட்சி. குழந்தைகள் மனதில் சாதிய உணர்வை தூண்டி விடுகிறார்கள். அரசு பள்ளிகளில் மட்டும் தான் இப்படிப்பட்ட சம்வங்கள் நடக்கிறது. இதை தடுக்க தவறியது அரசின் இயலாமைதான். நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. அதை பாராட்ட மனம் வரவில்லை. அதிலும் மொழி பிரச்சனையை சொல்லி தங்கள் குறுகிய மனதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எதிர்க் கட்சிகள் என்ன சொன்னாலும் சரி. அதை கண்டு கொள்ளாமல் மக்களுக்கு என்ன தேவையோ அதை பா.ஜனதா அரசு தொடர்ந்து செய்து கொண்டே தான் இருக்கும். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. நடக்கும் விஷயங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் புரிய வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.