நீட் மசோதாவுக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது ஒப்புதல் இனி அவசியமும் இல்லை என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளிகளின் கவனிப்பு பிரிவு, ஹோமியோபதி சிகிச்சை பிரிவு ஆகிய கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதிய கட்டிடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் ‘ஹெல்த் வாக்’ முறை விரைவில் தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி பாதையை மேம்படுத்தி, இருபுறமும் மரங்கள் நட்டு, இருக்கைகள் அமைத்து, நடைபயிற்சியின் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கப்படும். இத்திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார். ஒவ்வொரு மாதமும் சகாதாரத்துறை அதிகாரிகள் அந்தச் சாலையில் நடப்பவர்களுக்கு தேவையான ஹைட்ரேசன் மற்றும் சுகாதார பரிசோதனைகளை இலவசமாக செய்வார்கள்.
தென்காசி மாவட்டத்தில் ‘ஹெல்த் வாக்’ சாலைக்கான இடத்தை ஆட்சியருடன் ஆய்வு செய்தேன். அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்த சாலை பயன்பாட்டுக்கு வரும். தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி இல்லாத நிலை உள்ளது. இந்த 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. முதலில் ஒன்று கிடைத்தாலும் அது தென்காசிக்கு வழங்கப்படும். தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க தன்னார்வலர் ஒருவர் 16 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். அந்த இடத்தை ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளோம்.
நீட் தேர்வு விலக்கு பெற்றே ஆக வேண்டும் என்பது தமிழக மக்களின் எண்ணம். அதை நிறைவேற்ற தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தினார். மசோதாவை திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. வேறு வழியின்றி ஆளுநர் அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைத்தார். குடியரசு தலைவர் அதை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். உள்துறை அமைச்சகம் தமிழகத்தில் உள்ள ஆயுஷ் துறை, கல்வித்துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளுக்கு சில விளக்கங்களை கேட்டுள்ளது. அவற்றுக்கு சரியான பதிலை அளித்துள்ளோம். இந்த மசோதா இப்போதும் உயிரோட்டத்துடன் உள்ளது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெழுத்திடமாட்டேன் எனக் கூறியுள்ளார். இனிமேல் நீட் மசோதாவுக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது ஒப்புதல் இனி அவசியமும் இல்லை. இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்திடமாட்டேன் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் அந்த தகவலை ஆளுநருக்கு தெரிவிப்பார். இனி எந்த வகையிலும் ஆளுநருக்கும், நீட் விலக்கு மசோதாவுக்கும் தொடர்பு இல்லை. அரசுடன் இணைந்து பயணிப்பதுதான் ஆளுநரின் கடமை. ஆனால் ஆளுநர் அதற்கு எதிராக செயல்படுகிறார். தேவையற்ற விவகாரங்களில் வாங்கி கட்டிக்கொள்வது அவர் வகிக்கும் பொறுப்புக்கு தகுதியானதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.