காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது. எனவே தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நாளை (திங்கட்கிழமை) வழக்கு தாக்கல் செய்கிறது.
தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தர வேண்டிய தண்ணீரை தரவில்லை. இதன் காரணமாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் காய்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை உணர்ந்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய 2 அமைப்புகளும் விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை 2 முறை சந்தித்து கோரிக்கை விடுத்தார். மேலும் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த சூழ்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையகூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக, கர்நாடக அதிகாரிகளுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது கர்நாடக அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசியதால், தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் காவிரியில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.
இதற்கிடையே கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மைசூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம், கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. இதை அமர்ந்து பேசி இரு மாநிலங்களும் சுமுக தீர்வு காண வேண்டியது அவசியம். அதாவது இரு மாநிலங்களும் அமர்ந்து தண்ணீர் இல்லாத கஷ்ட காலங்களை எப்படி எதிர்கொள்வது என்று பேசி தீர்வு காண்பது அவசியம். இந்த ஆண்டு தமிழத்திற்கு காவிரியில் கர்நாடகம் தர வேண்டிய அளவு தண்ணீர் இன்னும் தராமல் இருப்பதால், அதை உடனடியாக தர வேண்டும் என்று தமிழக அரசு கேட்டு வலியுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவில் மழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு போதிய அளவில் நீர் வரவில்லை. அதனால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே காவிரியில் கணிசமான நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. அதனால் கூடுதலாக தண்ணீர் திறந்து விட இயலாது. அதனால் 2 மாநிலங்களும் இந்த கஷ்ட காலத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. கேரளா மற்றும் குடகு பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளது. அதனால் நீர்வரத்து குறைந்துள்ளது. நிலைமையை பார்த்து நீர் திறந்துவிடப்படும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நாளை வழக்கு தாக்கல் செய்கிறது. இதனை அமைச்சர் துரைமுருகன் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு நியாயமாக நடப்பு ஆண்டு ஜூன் 1-ந்தேதியில் இருந்து இம்மாதம் 11-ந்தேதி வரை 53.27 டி.எம்.சி. நீரை திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழங்கியதோ 15.79 டி.எம்.சி. மட்டும்தான். ஆக நமக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 37.97 டி.எம்.சி. ஆகும். சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி, காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த 2 குழுக்களும் சேர்ந்துதான் நமக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து நீரை வாங்கி கொடுக்க வேண்டும். ஆனால் இந்த 2 குழுக்களும் ஏனோ, தானோ என்று இருப்பது மட்டும் அல்லாது, வறட்சி காலத்தில் இருக்கிற நீரை எப்படி தமிழ்நாடு, கர்நாடகம் பங்கீட்டு கொள்ள வேண்டும் என்ற ஒரு கொள்கையையும் வகுக்கவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி உருவானதுதான் காவிரி நீர் மேலாண்மை ஆணையம். அதனையும் மதிக்கவில்லை, நீரும் தர மாட்டேன் என்று கர்நாடக அரசு சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாகும். எனவே இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டு நாளை வழக்கு தாக்கல் செய்ய போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.