அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பல்வேறு ஊடகங்களில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆர்.வி.அசோக் குமாரை, அமலாக்கத் துறையினர் கேரள மாநிலம் கொச்சியில் வைத்து கைது செய்துள்ளதாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை மேற்கொண்டு வரும் விசாரணையின் அடிப்படையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் ஆர்.வி.அசோக் குமாருக்கு, கடந்த 16.06.2023, 21.06.2023, 29.06.2023 மற்றும் 15.07.2023 ஆகிய தேதிகளில் இதுவரை நான்கு முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஒருமுறைகூட விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் சம்மன் தொடர்பாக அவரது தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோருக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்களும் விசாரணைக்கு இதுவரை ஆஜராகவில்லை. இந்த வழக்கில், இவர்களின் மூவரின் வாக்குமூலங்கள் மிக முக்கியமானது. இவர்களது வாக்குமூலங்கள், இந்த வழக்கில் மிகு முக்கிய பங்காற்றும் என்பதால், இவர்களுக்கு சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், இந்த மூவரும் இதுவரை அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை கேரள மாநிலம் கொச்சியில் அமலாக்கத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.