நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள ராயவரத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் இன்று பங்கேற்க வந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மாநில அரசின் சட்டமுன்வடிவு, ஆளுநரைத் தாண்டி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுவிட்டது. குடியரசுத் தலைவர்தான் நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்து போடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு அதிகாரமே கிடையாது. தனக்கு இல்லாத அதிகாரத்தை தான் செயல்படுத்த மாட்டேன் என்று சொல்வதில் என்ன பெருமை? இவருக்கு அதிகாரமே கிடையாது. இல்லாத அதிகாரத்தை செயல்படுத்த மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார் இதற்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.