“ஊழலை ஒழிக்க வந்த மனிதப் புனிதராக வேடமேற்று, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று 2024 இல் மீண்டும் ஆட்சிக்கு நான் தான் வருவேன் என்று திரும்பப் திரும்ப பிரதமர் கூறுகிறார். ஆனால், 2024 தேர்தலில் அவர் வெற்றி பெற முடியாத நிலையை உருவாக்கத்தான் ‘இந்தியா’ கூட்டணி உருவாகியிருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளதாவது:-
நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஊழலே காரணம். கரையான்களைப் போல ஊழல் நாட்டின் அமைப்புகளை அரிக்கிறது என்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். பேசுவதற்கு முன்பு பாஜகவின் ஊழலைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் எதிர்கட்சிகள் மீது சேற்றை வாரி இறைத்திருக்கிறார். உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் எவர் பதவிக்கு வந்தாலும் தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற்றுதான் பதவிக்கு வர முடியும் என்கிற அடிப்படை அரிச்சுவட்டை அறியாமல் குடும்ப அரசியல் பற்றி பேசியிருக்கிறார். தலைவர் ராகுல் காந்திக்கு மக்களிடையே கிடைத்து வருகிற அமோக வரவேற்பை தாங்கிக் கொள்ள முடியாமல் இத்தகைய குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் 2019 தேர்தலில் வெற்றி பெற்றார். 2019 தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளையும் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக, 9 ஆண்டுகளை கடந்து ஆட்சி செய்கிற மோடி அறிமுகப்படுத்திய உதான் திட்டம் தோல்வி, எச்.சி.எல். இன்ஜின் தயாரிப்பில் ரூபாய் 159 கோடி இழப்பு, பரனூர் உட்பட 5 சுங்கச்சாவடியில் கூடுதலாக ரூபாய் 154 கோடி பொதுமக்களிடம் வசூல், எல்லாவற்றுக்கும் மேலாக பாரத் மாலா திட்டத்தில் பல ஆயிரம் கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. இத்திட்டத்தின் செலவு முதலில் ரூபாய் 528 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஆனால் பின்னர் ரூபாய் 7287 கோடியாக அதிகரிக்கப்பட்டது. இது 1278 சதவிகிதம் அதிகமாகும். பாரத் மாலா திட்டத்தின்படி 34,800 கிமீ நீளத்துக்கு நெடுஞ்சாலை அமைக்க ரூ.5,35,000 கோடியை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அங்கீகரித்தது. ஆனால், 26,316 கிமீ நீளமுள்ள நெடுஞ்சாலை அமைக்க ரூ.8,46,588 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கி.மீ தொலைவுக்கு ரூ. 15.37 கோடி என்ற செலவை விட இரண்டு மடங்கு அதிகமாக, ஒரு கி.மீட்டருக்கு ரூ.32.17 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பல செலவுகள் அதிகமாக இருந்தாலும், 31 மார்ச் 2023 வரை 13,499 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளன. இது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அங்கீகரித்த நீளத்தில் 39 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
துவாரகா விரைவுச் சாலையின் உயர்த்தப்பட்ட திட்டச் செலவு குறித்தும் சிஏஜி அதிருப்தி தெரிவித்துள்ளது. இது அனுமதிக்கப்பட்ட ரூ. 18 கோடி கி.மீ.யிலிருந்து ரூ.250 கோடி கிமீ என 14 மடங்கு உயர்ந்துள்ளது. பாரத்மாலா திட்டத்துக்கான டெண்டர் முறைகேடுகளையும் – வெற்றிகரமான ஏலதாரர்கள் டெண்டர் நிபந்தனையை பூர்த்தி செய்யாதது, தவறான ஆவணங்களின் அடிப்படையில் ஏலதாரர்கள் தேர்வு செய்யப்பட்டது, அங்கீகரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் அல்லது தவறான டிபிஆர்-கள் இல்லாமல் வழங்கப்பட்ட பணிகள் மற்றும் ரூ.3,598.52 அளவுக்கு நிதியை திருப்பிவிட்டது போன்றவற்றையும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. தமது நேரடி கண்காணிப்பில் நடந்த பாரத்மாலா திட்டங்களின் திறமையின்மைக்கும் ஊழலுக்கும் பிரதமர் பொறுப்பேற்பாரா?
சுங்கச்சாவடி விதிகளை மீறியதை சிஏஜி கண்டறிந்துள்ளது. சீரற்ற முறையில் தணிக்கை செய்யப்பட்ட 5 சுங்கச்சாவடிகளில் பயணிகளிடமிருந்து ரூ.132.05 கோடியை தவறாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்துள்ளது. அதே நேரத்தில், தேசிய நெடுஞ்சாலையின் திட்டங்களின் இரண்டு பிரிவுகளில் சலுகை ஒப்பந்தங்களில் வருவாய் பகிர்வுக்கான ஒதுக்கீடு இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.133.36 கோடி வருவாயை இழந்தது. இந்த தணிக்கை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டால், ஒட்டுமொத்தமாகக் கருவூலத்துக்கும், பயணிகளுக்கும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்படும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மீது பிரதமர் நடவடிக்கை எடுப்பாரா?
ஊழலை ஒழிக்க வந்த மனிதப் புனிதராக வேடமேற்று, மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று 2024-இல் மீண்டும் ஆட்சிக்கு நான் தான் வருவேன் என்று திரும்பப் திரும்ப கூறுகிறார். ஆனால், பொருளாதார பேரழிவு காரணமாகவும், திறமையற்ற நிர்வாகத்தினாலும் 2024 தேர்தலில் அவர் வெற்றி பெற முடியாத நிலையை உருவாக்க ராகுல் காந்தி எடுத்த முயற்சியின் விளைவாக மகத்தான ‘இந்தியா’ கூட்டணி உருவாகியிருக்கிறது. இந்தக் கூட்டணியினுடைய கடும் முயற்சியின் காரணமாக மல்லிகார்ஜுன் கார்கே கூறியதைப் போல, அடுத்தமுறை பிரதமராக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் வாய்ப்பை மோடிக்கு நாட்டு மக்கள் நிச்சயம் வழங்க மாட்டார்கள். அதற்கு மாறாக அவரது வீட்டிலேயே தேசியக் கொடி ஏற்றும் நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.