பரனூர் டோல்கேட்டில் மத்திய அரசு கூட்டுக்கொள்ளை: வேல்முருகன்!

பரனூர் டோல்கேட்டில் விதிகளை மீறி ரூ. 22 கோடி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கை வெளியிட்ட நிலையில், தவாக தலைவர் வேல்முருகன் கொந்தளித்துள்ளார்.

செங்கல்பட்டு அருகே செயல்பட்டு வரும் பரனூர் சுங்கச்சாவடி எப்போதுமே மிகவும் பிஸியானது. இங்கு பெரும்பாலான நேரங்களில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும். இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்திய தணிக்கை குழு, 2017 முதல் 2021 வரை இந்த பரனூர் சுங்கச்சாவடியில், விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் ரூ. 22 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில், கடுமையான விலைவாசி உயர்வு, வேலையின்மையால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் சொல்லொண்ணா துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த சுங்க கட்டண உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாமானிய மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசு அமைத்துள்ள சாலையில், தனியார் நிறுவனங்கள் மக்களிடம் பணம் வசூலிக்க சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமாக 62 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும், போராடியும் வருகிறது. தமிழ்நாட்டில் 60 கிலோ மீட்டர் தூர இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகள், நகர்ப்பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தும் பணம் வசூலிக்கும் மையங்களாகவே செயல்பட்டு பொதுமக்களிடம் கொள்ளையடித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் அம்பலப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சுங்கக்கட்டண விதிகளின்படி, நான்கு வழிச்சாலைகள் ஆறுவழிச் சாலைகளாகவோ, எட்டுவழிச் சாலைகளாகவோ தரம் உயர்த்தப்படும் போது, கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுங்கக் கட்டணத்தில் 75 விழுக்காடு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், தாம்பரம் – திண்டிவனம் இடையே இரு இடங்களில் நான்குவழிச் சாலையை எட்டுவழிச் சாலையாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் சுங்கக் கட்டணத்தைக் குறைக்காமல் வழக்கமான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலித்து வருவது கண்டனத்துக்குரியது.

பரனூர் சுங்கச்சாவடி மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சுங்கச்சாவடிகளில் நூற்றுக்கணக்கான கோடிகள் வசூலிக்கப்பட்டிருக்கும் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் இத்தகைய சுங்கக்கட்டணக் கொள்ளையை தடுக்காமல், சுங்கச்சாவடி உரிமையாளர்களோடு கை கோர்த்துக் கொண்டு கூட்டுக் கொள்ளையில் மத்திய அரசு ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளை அடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது. எனவே, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட தமிழ்நாடு உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் காலவதியாகியுள்ள 30க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளையும், 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாக இருக்கும் சுங்கச் சாவடிகளையும், நகர்புறத்தில் இயங்கும் சுங்கச் சாவடிகளையும் உடனடியாக அகற்றிட, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சுங்கச் சாவடி கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன். கடந்த 2018ஆம் ஆண்டு, உளுந்தூர்பேட்டையில் வேல்முருகன் தலைமையில் சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர், சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.