திமுகவின் நோக்கம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பட வேண்டும்: அண்ணாமலை

திமுகவின் நோக்கம் எனனவாக இருக்கிறது? தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பட வேண்டும் என்பதுதான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஜெகதீஸ்வரனின் நண்பர் தான் இந்த ஃபயாஸ்தீன். நீட் தேர்வால் தனது நண்பனும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டதை ஜீரணிக்க முடியாத ஃபயாஸ்தீன், நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தார். நீட் தேர்வால் செல்வந்தர் வீட்டு பிள்ளைகளால் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடிவதாகவும், தான் கூட நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்ணை பெற்று தற்போது ரூ.25 லட்சம் செலுத்தி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் கூறினார். மேலும், நீட் தேர்வு வருவதற்கு முன்பு இந்தியாவில் மருத்துவர்களான எல்லோருமே தகுதியற்றவர்கள் என மத்திய அரசு கூறுகிறதா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அது மட்டுமல்லாமல், மாணவன் ஜெகதீஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் உதயநிதியை முற்றுகையிட்ட ஃபயாஸ்தீன், “அதிகாரத்திற்கு வந்தும் கூட உங்களால் ஏன் சார் நீட் தேர்வை ரத்து செய்ய முடியல.. இன்னும் எத்தனை அனிதாவையும், ஜெகதீஸ்வரனையும் நாங்க இழக்குறது” என கேட்டு அதிர வைத்தார். தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க ஃபயாஸ்தினின் பேச்சு தான் தீயாக பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கன்னியாகுமரியில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று இதுதொடர்பாக கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவனின் நண்பர் ஒருவர் ஆவேசமாக பேசியிருக்கிறார். நான் 25 லட்சம் ரூபாய் கொடுத்துதான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக அந்த மாணவனே கூறுகிறான். அந்த மாணவன் பெயர் ஃபயாஸ்தீன். அவன் எந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான் தெரியுமா? திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் பாலாஜி மருத்துவக் கல்லூரியில் தான் அவன் சேர்ந்திருக்கிறான்.

தனியார் கல்லூரிகளுக்கு நீங்களே லைசென்ஸ் கொடுத்து, அதை நீங்களே திமுக காரர்களுக்கு கொடுத்து பணம் வசூல் செய்வீங்க. 2006 முதல் 2011 வரையிலான 5 ஆண்டு காலத்தில் மட்டும் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்போது திமுகவின் நோக்கம் எனனவாக இருக்கிறது? தனியார் மருத்துவக் கல்லூரிகள் பயன்பட வேண்டும். அவர்களிடம் கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும். 1 கோடி முதல் 2 கோடி வரை ஒரு சீட்டை விற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம். அதனால்தான் திமுகவுக்கு நீட்டின் மீது கோபம்.

இப்போது ஏதோ ஏழை மாணவர்கள் மீது அக்கறை இருப்பது போல திமுக பொங்குகிறதே. அந்த ஏழை மாணவர்களுக்காக திமுக என்ன செய்தது? திமுக தமிழகத்தில் 6 முறை ஆட்சியில் இருந்து வெறும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகளைதான் கொண்டு வந்திருக்கிறது. ஆனால், பாரத பிரதமர் மோடி ஒரே நேரத்தில் தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்திருக்கிறார். இதுதான் திராவிட மாடலுக்கும் மோடி மாடலுக்கும் இடையேயான வித்தியாசம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.