மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மதுரையில் அ.தி.மு.க. வரலாற்றின் எழுச்சி மாநாடு வரும் 20ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. லோக்சபா தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. இதற்கு முன்னோட்டமாக தொண்டர்கள் தனது பக்கம் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக ஆனி மாதமே பந்தல்கால் ஊண்டப்பட்டு விட்டது. ஆவணி மாதம் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் குடும்பத்தோடு அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மாநாட்டிற்காக மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையில்லை சான்று பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநாடு நடைபெற உள்ள இடம் விமான நிலையத்தின் அருகில் உள்ளதால் வான வேடிக்கை வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க அதிமுக மாநாடு நடத்தும் அதே நாளில் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இது அதிமுக நிர்வாகிகளிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாநாடு தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் வெளியாகக் கூடாது என்பதற்காக திமுக உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளதாக குற்றம் சாட்டினார் ஜெயக்குமார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-
மதுரையில் வரும் 20ஆம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வியக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த மாநாட்டை கண்டு பயந்து நடுங்கிப்போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் அங்கு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார். இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது. சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. 3வது ஆண்டு நடக்கிறது. இவ்வளவு நாட்கள் என்ன முயற்சி எடுத்தார்கள்?
நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளையும் அதிமுக எடுத்தது. அதே முயற்சியை தான் திமுகவும் எடுத்து வருகிறது. இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்தாவது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, ஆதரவை கேட்டு அந்த பிரச்சினையை லோக்சபாவில் எழுப்பி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. 10 ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.