நேருவை மக்கள் அறிவது வெறும் பெயரால் மட்டும் அல்ல, அவரின் பணிகளால் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நேரு அருங்காட்சியக பெயர் ‘பிரதமர் அருங்காட்சியகம்’ என்று மாற்றப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். “நேருவை மக்கள் அவரின் பணிகளால் அறிகிறார்கள். அவருடைய பெயரால் மட்டுமல்ல” என்று அவர் கருத்து தெரித்துள்ளார்.
முன்னதாக, பெயர் மாற்றம் குறித்து டெல்லியில் உள்ள பிரதமர் நினைவு அருங்காட்சியக துணைத் தலைவர் ஏ.சூர்ய பிரகாஷ் கூறியதாவது:-
டெல்லி டீன் மூர்த்தி வளாகத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம், நூலகம் (என்எம்எம்எல்) அமைந்துள்ளது. இதன் பெயரை பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (பிஎம்எம்எல்) சொசைட்டி என மாற்ற கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றம் கடந்த புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
நேருவின் பாரம்பரியத்தை மறுப்பது, சிதைக்கவே இந்த பெயர் மாற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டுபவர்கள் முதலில் அருங்காட்சியகத்தை வந்து பார்வையிட வேண்டும். தேசத்தின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு குறித்து நாங்கள் மிகவும் பெருமைப் படுகிறோம். மரபை பின்பற்றி அதை மக்களுக்கு வெளிப்படுத்த முடிந்தவரையில் அனைத்தையும் செய்துள்ளோம். நேரு பிரதமராக இருந்த 17 ஆண்டு கால ஆட்சியில் இந்த தேசத்தின் பல்வேறு அம்சங்களில் அவர் ஆற்றிய அளப்பறிய பணிகள் அனைத்தும் இந்த மியூசியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெயர் மாற்றம் குறித்து சந்தேகம் உள்ள எவரும் அருங்காட்சியகத்துக்கு சென்று நேருவின் பெருமை எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதை நேரடியாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு சூர்ய பிரகாஷ் தெரிவித்தார்.