பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சியில் 7 மிகப்பெரிய ஊழல்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டுள்ளது. சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் ஊழல்கள் பற்றி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி சரமாரியாக கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) சார்பில் சமீபத்தில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் விதிமீறல்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக பேசி வரும் நிலையில் இந்த அறிக்கை என்பது மத்திய பாஜகவுக்கு எதிராக திரும்பி உள்ளது. குறிப்பாக மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் உள்ளிட்டவற்றில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகங்க பிரிவு தலைவி சுப்ரியா ஸ்ரீனேட் டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சிஏஜி அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் பிரதமர் மோடி ஆட்சியில் 7 பெரிய ஊழல்கள் நடந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது எனவும் அவர் கூறி அதனை வரிசையாக பட்டியலிட்டார். இதுதொடர்பாக சுப்ரியா ஸ்ரீனேட் கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 7 பெரிய ஊழல்களை செய்துள்ளதாக சிஏஜி வெளியிட்டுள்ளது. அதன்படி பாரத்மாலா திட்ட ஏலத்தில் மோசடி, துவாரகா எக்ஸ்பிரஸ்வேயில் 1 கி.மீ சாலை அமைக்க ரூ.250 கோடி செலவு, சுங்கச்சாவடி விதிகளை மீறி மக்களிடம் இருந்து ரூ.132 கோடியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூல் செய்துள்ளது உள்ளிட்டவை அடங்கும். AD மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 7.5 லட்சம் பயனாளிகள் ஒரே எண்ணின் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அதோடு அயோத்தி வளர்ச்சித் திட்டத்தில், ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் அளிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஓய்வூதியத் திட்டத்தின் பணத்தை விளம்பரத்திற்காக செலவிட்டுள்ளது. எச்ஏஎல் நிறுவனத்தில், விமான என்ஜின் வடிவமைப்பில் ஏற்பட்ட குளறுபடியால் ரூ.154 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 7 விஷயங்களையும் சிஏஜி கூறியுள்ளது.
மேலும் பிரதமர் மோடிக்கு நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். இதில் முதல் கேள்வி என்பது ஊழல்கள் குறித்து பிரதமர் மோடி மவுனம் கலைப்பாரா இல்லையா?. 2வது கேள்வி என்பது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மற்றும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?. 3வது கேள்வி என்பது ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளின் பணத்தை மோசடி செய்தது யார்?. 4வது கேள்வி என்பது ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஓய்வூதியத் திட்டத்தின் பணத்தை மற்ற திட்டங்களை மேம்படுத்துவதில் ஏன் செலவழித்தது? 5வது கேள்வி என்பது அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற நன்மைகளை வழங்குவது யார்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.