நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தி.மு.க., பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கிறது என்று செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை அ.தி.மு.க. மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக செல்லூர் ராஜூ ஏற்பாட்டின் பேரில் யானைக்கல்லில் ராட்சத பலூன் விடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பின் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை பொறுத்தவரை எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அது சட்டத்திற்கு உட்பட்டு போலீஸ் அனுமதியோடு தான் நடத்தப்பட வேண்டும் என்று பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தான் இந்த பலூன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தோம். இதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை. ஒவ்வொரு தனியார் நிறுவனங்களும் இது போன்று பலூன் விடுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க.வின் நிகழ்ச்சிக்கு போலீசார் தடை போட்டார்கள். நாங்கள் மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அப்போது அவரிடம் ரவுடிகள், போதைகள், வழிப்பறிகள், கொலைகள், கொள்ளைகள் இல்லாத மாநகரை உருவாக்க வேண்டும் என்றும், போக்குவரத்து போலீசார், சாலைகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டோம். அதே போல் அ.தி.மு.க.வின் பலூன் நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
அ.தி.மு.க. மாநாடு நடைபெறும் நாளன்று, தி.மு.க. அரசு போராட்டம் அறிவித்து இருப்பது எங்களை பார்த்து பயந்து விட்டது என்றுதான் அர்த்தம். அ.தி.மு.க. மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் எழுச்சி அலை வீசுகிறது. அதை தடுக்க தி.மு.க. பல நடவடிக்கைகளை எடுத்தது. இப்போது போராட்டம் அறிவித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இது பலன் இல்லாமல்தான் போகும். சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று போகுமா? அதுபோல தான் தி.மு.க.வின் நீட் போராட்டத்தால் அ.தி.மு.க. மாநாட்டை மங்க செய்ய முடியாது. மு.க.ஸ்டாலின் கையெழுத்து போட்டவுடன் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்று மக்களுக்கு பொய்யான வாக்குறுதியை உதயநிதி ஸ்டாலின் தந்தார். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வினை ரத்து செய்ய முடியவில்லை. மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்-அமைச்சராக இருக்கிறார். நாங்கள் அடிமை அரசு இல்லை. வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் நாங்கள் தான் என்றார்கள். அப்படியானால் அவர்கள் நீட்டுக்கு எதிராக ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றத்திற்கு சென்றோ போராட்டம் நடத்த வேண்டும். சென்னையில் இருந்து கொண்டு போராட்டம் நடத்துவது என்பது கண்துடைப்பு தான். நீட் தேர்வையும், கல்வியையும் மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு கொண்டு போனதும் தி.மு.க.தான். ஆனால் இப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.