சசிகலா அமமுகவில் இணைந்து பயணிப்பது இயலாத காரியம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலா சிறைக்கு சென்ற 2017ஆம் ஆண்டு தனது அக்கா மகன் தினகரனை அதிமுக துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார். எனினும், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தினகரனை அதிமுகவிலிருந்து நீக்கி கட்சியைக் கைப்பற்றியது. அதன்பிறகு சுயேச்சையாக நின்று ஆர்.கே.நகரில் வென்ற தினகரன், 2018ஆம் ஆண்டு முதல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நடத்தி வருகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பதவி சசிகலாவுக்காக காலியாக விடப்பட்டதாகவும், பொதுச் செயலாளராக தினகரன் உள்ளார் என்று அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தலைவர் நியமிக்கப்படாமல் துணைத் தலைவராக அன்பழகன் செயல்பட்டு வருகிறார். சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, அமமுகவுடன் அதிகாரப்பூர்வமாக எந்த தொடர்பிலும் இல்லை. அதிமுகவை மீட்பதற்காக வழக்கு தொடர்ந்துள்ளதால் அவர் தனித்து இயங்குவதாகவும் அமமுக தரப்பில் தெரிவித்தனர். சசிகலாவுக்காக இதுவரை காலியாக இருந்த தலைவர் பதவிக்கு அண்மையில் கோபாலன் நியமிக்கப்பட்டார். இதனிடையே சசிகலாவுக்கும் தினகரனுக்கும் அரசியல் ரீதியாக சுமூகமான உறவு இல்லை என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் திருச்சியில் நேற்று நடந்த அமமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்துள்ளதாகவும், அதனை ஜனநாயக முறையில் மீட்டெடுக்க தொடங்கிய கட்சிதான் அமமுக என்றும், உறுதியாக போராடி அதிமுகவை மீட்டெடுப்போம் என தெரிவித்தார். சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் தான்தான் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் அவர் அமமுகவுடன் பயணிப்பது இயலாத காரியம் என்றும் கூறினார்.
சசிகலா பிறந்தநாளுக்குக் கூட வாழ்த்து சொல்லவில்லை, ஏதாவது கருத்து வேறுபாடா என்று செய்தியாளர் கேட்க, “சித்திக்கு மட்டுமல்ல என்னுடைய அப்பாவுக்கும் இன்றுதான் பிறந்தநாள். இன்றைய கூட்டம் என்பது இரண்டு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்தது. தொலைபேசியில் கூட வாழ்த்து சொல்லலாமே. ஆகவே, இந்த கூட்டத்திற்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறாததற்கும் முடிச்சு போட வேண்டாம்” என்று பதில் அளித்தார்.