தென்தமிழகத்தில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால், சாதிச் சண்டைகள், கந்துவட்டிக் கொடுமை, கிராமங்களுக்குள் நிலவக்கூடிய பிரச்சினைகள் தீண்டாமை இவையெல்லாம் தானாக சரியாகிவிடும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று நெல்லை மாவட்டத்தில் 2-வது நாளாக தனது நடைபயணத்தை வள்ளியூர் நம்பியான் விளையில் தொடங்கினார். அங்குள்ள பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு இருந்து நடைபயணத்தை தொடங்கி அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை கொடுத்தும் வரவேற்றனர். ஏராளமான சிறுவர், சிறுமிகள் மோடி வேடமணிந்து அவரை வரவேற்றனர். தொடர்ந்து அப்பகுதியில் நடைபயணம் சென்ற அவருக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக, விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளையில் உள்ள அவரது உருவ சிலைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
1857-ல் முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கியதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வீரம் விளைந்த இந்த நெல்லை மண்ணில் ஏராளமானோர் இந்திய சுதந்திரத்திற்காக போராடி இருக்கிறார்கள். அதை இளைய தலைமுறை இடையே கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை என்றார்.
அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் தி.மு.க. குறித்தும், முதலமைச்சர் குறித்தும் அவதூறு பரப்பியதாக உங்கள் மீது முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் புகார் அளித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டபோது அண்ணாமலை கூறியதாவது:-
அரசியலைப் பொறுத்தவரை நாங்கள் தி.மு.க.வின் பொய்யை தோலுரித்துக் காட்டுவதை அவதூறு பரப்புவதாக தி.மு.க.வினர் கூறுகிறார்கள். என்ன அவதூறு பரப்பினேன்? யார் குறித்து அவதூறு பரப்பினேன் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். நான் பேசியது அவதூறு என்றால், ராமநாதபுரம் மாநாட்டில் பிரதமர் மோடி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அவதூறு இல்லையா? பாராளுமன்ற திறப்பு விழாவிலே செங்கோலுக்கு பிரதமர் மோடி மரியாதை செய்தது குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜை முதலில் கைது செய்ய வேண்டும். தி.மு.க.வின் அவதூறு வழக்குகளை கண்டு பயப்பட போவதில்லை. சில நேரங்களில் தி.மு.க.விற்கு அவர்கள் பாணியிலேயே நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டி உள்ளது .
நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றுமே இல்லாத பிரச்சினையை பெரிதாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான். இந்தியாவில் வேறு எங்கும் நீட் தேர்வு தொடர்பாக தற்கொலைகள் இல்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த காலம் முதல் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் தான் நீட் தற்கொலைகள் நடைபெறுகின்றன. ஜார்க்கண்டிலேயே பழங்குடியின மாணவர் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். ஆந்திரத்தில் பின்தங்கிய மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள். நீட் தேர்வில் முதல் 10 இடங்களை பெற்றவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தில் இனி தற்கொலை நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
நாங்குநேரி சம்பவத்திற்கு போதிய வேலை வாய்ப்பு இல்லாததே காரணம். தென்தமிழகத்தைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்புகள் அதிகமாக ஏற்படுத்த வேண்டிய ஓர் இடமாக இருக்கிறது. தொழில் துறை சார்ந்த நிறைய வேலைவாய்ப்புகளை கொண்டு வர வேண்டும். குறிப்பாக இந்தப் பகுதிகளில் பொறியியல் படிப்புகளை படித்துவிட்டு மாணவர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். அதைத்தான், இந்த என் மண் என் மக்கள் யாத்திரையில் மிக முக்கியமான விஷயமாக நாங்கள் பார்ப்பது. நிறைய புத்திக்கூர்மையான குழந்தைகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இந்தப் பகுதிகளில் இருக்கின்றனர். எனவே, முதலில், தென்தமிழகத்துக்கு அதிகமான வேலைவாய்ப்புகளைக் கொண்டு வர வேண்டும்.
பல நிறுவனங்கள், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கியே செல்கின்றன. அரசு இந்தப் பகுதிகளில் வரிச்சலுகை கொடுத்து, நிறைய வேலைவாய்ப்புகளை இங்கு கொண்டு வரவேண்டும். தொழில்முனைவோர்களுக்கு இதுபோன்ற சலுகைகளைக் கொடுக்கும்போது, சின்ன சின்ன பிரச்சினைகளுக்கான சண்டைகளும், பெரிய பிரச்சினைகளாக இருக்கக்கூடிய சாதிச் சண்டைகள், கந்துவட்டிக் கொடுமை, கிராமங்களுக்குள் நிலவக்கூடிய பிரச்சினைகள் தீண்டாமை இவையெல்லாம் தானாக சரியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகியோரை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.