தமிழகத்துக்கு என்று தனிக்குணம் உண்டு. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என்ற பண்பட்ட உணர்வுகளைக் கொண்ட நம் தமிழகத்தின் உணர்வை, மாணவர்கள் அனைவரும் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னை கோயம்பேட்டில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். பின்னர் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
நான் எல்லாம் ஆற்றலோடு அல்ல, ஏதோ ஓரளவுக்கு பேசக்கூடிய ஒரு வாய்ப்பு இப்போது வந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் எத்தனையோ பேர் இருக்கலாம். அதில் முக்கிய காரணமாக இருந்தவர் பீட்டர் அல்போன்ஸ்தான். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அவர் பேசக்கூடிய பேச்சுகள் எல்லாம் நான் கேட்பதுண்டு. அவர் பலமுறை சட்டமன்றத்தில் என்னிடம் சொல்லியிருக்கிறார். அமைதியாக உட்கார்ந்திருக்கக்கூடாது. சட்டமன்றத்தில் எழுந்து அவ்வப்போது சில கேள்விகளைக் கேட்க வேண்டும். எதிர்க்கட்சியாகவும், ஆளுங்கட்சியாகவும் இருந்தபோது இவ்வாறான பல ஆலோசனைகளை வழங்கியவர் பீட்டர் அல்போன்ஸ்.
2007ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி சட்டமியற்றிய ஆட்சிதான் திமுக ஆட்சி. உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் 2009ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த நலவாரியத்தில் இதுவரை 15 ஆயிரத்து 37 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் முஸ்லீம் பெண்களுக்கான விடுதிகள் திமுக ஆட்சிக் காலத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்பட்டது. சிறுபான்மையினர் விடுதி, மாணவ மாணவியர்களுக்கு புத்த பூர்ணிமா, மஹாவீர் ஜெயந்தி, பக்ரீத், ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற சிறுபான்மையினருக்கு சிறப்பு உணவு வழங்க ஆணையிட்டிருக்கிறோம். 14 சிறுபான்மையின கல்லூரி விடுதிகளில், 14 சிறுபான்மையின செம்மொழி நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, 5 லட்சத்து 90 ஆயிரம் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்க ஆணையிடப்பட்டு, அவை வழங்கப்பட்டு வருகிறது.
சிறுபான்மையின கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான வருமான உச்ச வரம்பு, 2021-22 ஆம் ஆண்டு முதல் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கிராமப்புற மாணவியர் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில, 3 முதல் 6ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவியர்களுக்கு 3 கோடி 59 லட்சம் செலவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட ஹஜ் பயணிகளுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலன் காக்கக்கூடிய ஏராளமான நலத்திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் நலன் காக்க மக்கள் மன்றத்திலும் திமுக தொடர்ந்து செயலாற்றிடும் என்று உறுதியளிக்கிறேன். தமிழகத்துக்கு என்று தனிக்குணம் உண்டு. சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு என்ற பண்பட்ட உணர்வுகளைக் கொண்ட நம் தமிழகத்தின் உணர்வை, மாணவர்கள் அனைவரும் பெற வேண்டும். வேற்றுமை இல்லாத தமிழகத்தை நோக்கி நம் சமூகத்தை வழிநடத்த வேண்டும். மனிதநேயத்தைப் போற்றுங்கள். உங்கள் எண்ணங்களை அழுக்காக்கும் கருத்துகளை புறந்தள்ளுங்கள். நல்லிணக்கத்தின் பண்பை மாணவர்களாகிய நீங்கள் தொடர்ந்து எடுத்து செல்லுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.