திமுகவுக்கு என்று ஒரு வழிமுறை இருக்கிறது. எங்களை சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்க்க வேண்டிய நிலை வரும் என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் தெரிவு செய்யப்பட்டதில் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றுள்ளதா என ஆளுநர் ரவி சில கேள்விகளை முன்வைத்து கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிசெய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில், ஒதுக்கப்பட்ட அல்லது பிரதிநிதித்துவம் இல்லாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பதவிகள் வழங்க வேண்டும் என்று எண்ணினார். அந்த நோக்கத்துடன்தான், இன்றைக்கு டிஎன்பிஎஸ்சி தலைவராக இதுவரை எந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவில்லையோ, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை கருணாநிதி வழியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பினார். 1930-ல் இருந்து டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டவர்களில், எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இதுவரை தலைவர் பதவிக்கு வரவில்லையோ, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரான ஓய்வுபெற்ற டிஜிபியும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி, எந்தவிதமான விமர்சனத்துக்கும் உள்ளாகாமல் தன்னுடைய பணியை செய்த, அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சைலேந்திரபாபுவை தமிழக அரசு பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள ஆளுநர் மறுப்பது ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான்.
டிஎன்பிஎஸ்சியில் கடந்த காலங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. உச்ச நீதிமன்றம் வரை சென்று அந்த முறைகேடுகள் எல்லாம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இனிவரும் காலங்களில் அதுபோல நடக்கக்கூடாது என்பதற்காக காவல்துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வுபெற்ற ஒருவரை தமிழக அரசு பெருந்தன்மையுடன் நியமித்து அனுப்பியது. அதை ஆளுநர் புறக்கணித்திருப்பது கண்டனத்துக்குரியது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அதிமுகவினரையே டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமித்தார்கள் ஆனால் நாங்கள் அப்படியெல்லாம் செய்யாமல் அரசியலுக்கு அப்பாற்பட்ட அனுபவம் மிக்கவரான சைலேந்திரபாபுவை பரிந்துரை செய்தோம். ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு போட்டியாக இன்னொரு அரசை நடத்த முயற்சி செய்கிறார். இதை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு ஆறு மாதம் பொறுமையாக இருக்க வேண்டும் நாடாளுமன்ற தேர்தல் வரும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆளுநர் எந்த நிலைக்கு ஆளாவார் என்பது தெரியும். எங்களுக்கென்று ஒரு வழிமுறை இருக்கிறது. எங்களை சீண்டி பார்த்தால் பழைய திமுகவை பார்க்க வேண்டிய நிலை வரும். இவ்வாறு அவர் கூறினார்.