விஜயகாந்த் நல்லவர். அவர் நூறு வயது வரை வாழ வேண்டும்: பிரேமலதா

விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவலை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழக திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிகவை ஆரம்பித்தார். 2006 தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்ற அவர், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து வென்று எதிர்க்கட்சித் தலைவரானார். 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அக்கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. 2016க்குப் பிறகு விஜயகாந்த் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட மெல்ல மெல்ல ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கினார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சையும் எடுத்தார். எனினும், எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது முன்பைப் போல அவரால் சரளமாக பேச முடியவில்லை. சர்க்கரை நோய் தாக்கத்தால் அவருடைய கால் விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. உடல் உபாதைகள் காரணமாக வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். பிறந்தநாள் மற்றும் விழா நாட்களில் அவரது புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

தேமுதிக கட்சி நிர்வாகத்தை விஜயகாந்த் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன் கவனித்து வருகின்றனர். அனைத்து இடங்களுக்கும் பிரேமலதாதான் சுற்றுப் பயணம் செல்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

கேப்டன் எப்படி இருக்கிறார், கேப்டன் எப்படி இருக்கிறார்னு போகும் இடமெல்லாம் கேட்கிறார்கள். பதில் சொல்ல முடியலை என்னால. நீங்களும் அதைத்தான் எதிர்பாக்குறீங்க.. கேப்டன் நல்லா இருக்காரு. சூப்பரா இருக்கிறார்.. நூறு ஆண்டுகாலம் நம்மோடு இருந்து நம்மையெல்லாம் வழிநடத்துவார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை ரொம்ப ரொம்ப அதிகம். கடவுள் பதில் சொல்லியே ஆக வேண்டும். நல்லவர்கள் வாழ்ந்ததாகவே சரித்திரம் இருக்க வேண்டுமென தவிர வீழ்ந்ததாக சரித்திரம் இருக்கக் கூடாது. விஜயகாந்த் போன்ற நல்லவர்கள் வாழ வேண்டும். அதைப் பார்த்தால்தான் பத்து பேர் மக்களுக்கு நல்லது செய்வார்கள். விஜயகாந்த் எல்லா மக்களுக்கும் உதவி செய்துள்ளார். இறைவனிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். விஜயகாந்த் நல்லவர். அவர் நூறு வயது வரை வாழ வேண்டும்.

விஜயகாந்த் போல என் மகன் விஜய பிரபாகரனும் உண்மையை மட்டும்தான் வெளிப்படையாக பேசிவிடுவார். அவரிடம் விஜயகாந்த் உடல்நிலை பற்றி கேட்டதற்கு நன்றாக இருக்கிறார், உடல்நிலையில்தான் சற்று தொய்வு உள்ளது என்று சொன்னார். உடனே ஊடகங்கள் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு என்று செய்தி போட்டுவிட்டன. அவரின் உடல்நிலையில் எந்த பின்னடைவும் இல்லை. விஜயகாந்த் போல ஒரு வீரனை தமிழ்நாடு இனி பார்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.