ஸ்டாலின் உண்ணாவிரதத்தால் தான் விவசாய மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டன: தயாநிதி மாறன்!

விவசாயிகளுக்கு பெரும் தீங்கிழைக்கக் கூடிய வகையில் மத்திய அரசு கொண்டு வந்த விவசாய மசோதாக்கள், முதல்வர் ஸ்டாலின் உண்ணாவிரதத்தால் தான் நிறுத்தி வைக்கப்பட்டன என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் அண்மையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்றும், பொதுப் பட்டியலில் நீட் தேர்வு இருக்கும் போதும் அதை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் எனவும் கூறிவிட்டு தற்போது திமுக உண்ணாவிரதம் இருப்பது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும், மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் இதை குறிப்பிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுக தான்.. தற்போது அதை எதிர்த்து அந்தக் கட்சியே போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல் என அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, உண்ணாவிரதம் என்ற பெயரில் பெரிய நாடகத்தையே உதயநிதி ஸ்டாலின் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜெயக்குமாரின் கருத்து குறித்து திமுக எம்.பி. தயாநிதி மாறனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து தயாநிதி மாறன் கூறியதாவது:-

ஜெயக்குமார் பாவம்ங்க.. அவர் விரக்தியில அப்படி பேசிட்டு இருக்காரு. நான் கேக்குறேன். தமிழ்நாட்டுக்காக ஜெயக்குமார் என்ன பண்ணிட்டாரு. யாரை வேண்டுமானாலும் ஈஸியா குறை சொல்லிடலாம். ஜெயக்குமார் என்ன தமிழ்நாட்டுக்காக சாதனை செய்துவிட்டாரா? பெரிய சாதனையாளரா அவரு. அவர் மகன் எம்.பி.யாக இருந்தார். தென் சென்னை தொகுதிக்கு அவர் ஏதாவது செய்தாரா? கிடையாது. பொதுமக்களுக்கு ஜெயக்குமார் எதுவுமே செய்தது கிடையாது.

ஆனால் நாங்கள் அப்படி அல்ல. மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்களே என உணர்வுப்பூர்வமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அடிமை அதிமுக அரசு நீட்டை எதிர்த்து இதுவரை குரல் கொடுக்கிறதா? அவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது எங்களை பற்றி பேசுவதற்கு.. நீட்டை எதிர்த்து தைரியமாக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் உதயநிதி ஸ்டாலின் தான்.

நீட்டை எப்படி ரத்து பண்ண போறீங்கனு கேக்குறாங்க. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று, நமது முதல்வர் ஸ்டாலின் கைகாட்டும் நபர் தான் பிரதமராக வரப் போகிறார். அப்பொழுது நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்வோம். இதெல்லாம் சாத்தியமா என கேட்பீர்கள். சாத்தியம் தான். விவசாய மசோதாக்களை எதிர்த்து எங்கள் தலைவர் ஸ்டாலின் உண்ணாவிரதம் இருந்தார். உடனடியாக அந்த மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டன. அதே மாதிரி நீட்டும் ரத்தாகும். இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.