இந்தியாவின் விண்வெளி ஆய்வில் மாபெரும் பாய்ச்சல்: முதல்வர் ஸ்டாலின்!

சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் இஸ்ரோவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இதனை ஜோஹன்னஸ்பெர்க்கில் காணொலி மூலம் கண்டு ரசித்த பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். விண்வெளிக்கும் நிலவுக்கும் மனிதனை அனுப்பவதே அடுத்த இலக்கு என்று கூறினார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தை போனில் தொடர்பு கொண்டும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். விரைவில் பெங்களூரு வந்து அனைத்து விஞ்ஞானிகளையும் நேரில் சந்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது! சந்திரனின் மேற்பரப்பைக் கைப்பற்றிய நான்காவது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை என்று குறிப்பிட்டுள்ளார். அயராத முயற்சிகளை மேற்கொண்ட ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள் என்றும் இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சந்திரயான் 3 விண்கல திட்டத்தின் இயக்குநர் வீர முத்துவேலை அலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின். இன்று உலகமே இந்தியாவை வியந்து பாராட்ட காரணமாக அமைந்து இருக்கும் சந்திரயான் 3 நிலவு பயண வெற்றியின் பின்னால் இருப்பது வீர முத்துவேல் என்ற தமிழர்தான். சந்திரயான் 3 நிலவை தொட்ட பின்னர் திட்ட இயக்குநரான விழுப்புரத்தை சேர்ந்த வீர முத்துவேலையே அழைத்து பாராட்டினால் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். ‘அறிவியல் தமிழர்’ வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்! என்று குறிப்பிட்டு அலைபேசியில் பேசிய வீடியோவையும் முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில் “சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது தமிழ்நாட்டிற்கு ஒரு மகத்தான சாதனை உணர்வைக் தருகிறது. மூன்று சந்திராயன் பயணங்களையும் மயில்சாமி அண்ணாதுரை, வனிதா மற்றும் தற்போது வீரமுத்துவேல் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் வழிநடத்தப்பட்டுள்ளன. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அறிவு நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டின் இளம் திறமையாளர்கள் இவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நமது இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பங்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.