திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது. இந்தியாவின் தலைநகர் வரை அதன் வெளிச்சம் படர்ந்தது. அந்த சூரியனின் பெயர் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர்பேசியதாவது:-
வாழ்வின் ஓரு பொன்னாள் என சொல்லக்கூடிய வகையில் இந்த நாள் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது. இந்தியாவின் தலைநகர் வரை அதன் வெளிச்சம் படர்ந்தது. அந்த சூரியனின் பெயர் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அவர் படித்த தொடக்கப் பள்ளியில் இந்த சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்து வைப்பதில் பெருமை கொள்கிறேன்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்று பல திட்டங்களை செயல்படுத்தினாலும் இந்த காலை உணவு திட்டம் எனக்கு மன நிறைவை தருகிறது. பேருந்தில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான திட்டம், உயர் கல்வி பயிலும் அரசுப் மாணவிகளுக்கான ‘புதுமை பெண்’ திட்டம் ஆகிய திட்டங்களின் பயனாளர்களைக் காட்டிலும் எனக்குத்தான் அதிக மகிழ்ச்சி. அடுத்த மாதம் குடும்ப தலைவிகளும் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்க உள்ளோம். அது எனக்கு மேலும் மகிழ்ச்சி தர உள்ளது. திராவிட மாடல் அரசின் முக்கிய திட்டம்தான் காலை உணவு திட்டம்.
கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தேன். இப்போது அதை அனைத்து பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்துள்ளோம். சுமார் 17 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை காப்பியம் சொல்கிறது. உயிர் கொடுக்கிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. எளிய பின்புலத்தை சேர்ந்த பிள்ளைகள் பள்ளிக்கு செல்வது எந்த காரணத்தாலும் தடைபடக் கூடாது என பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். கல்வி பெற வறுமை, சாதிய வேறுபாடு போன்றவை காரணமாக இருக்கக் கூடாது என பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் நினைத்தார்கள்.
அவர்களது வழித்தடத்தில் நடக்கும் நான், அவர்களது கனவுகளை செயல்படுத்தும் இடத்தில் இருந்து அதை தொடர்ந்து செயல்படுத்துவேன். இதற்கான தொடக்கம் திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதி கட்சியின் தலைவராக இருந்த தியாகராயர்தான். சென்னை மாநகராட்சியின் தலைவராக அவர் இருந்தபோது ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு 1922-ல் மதிய உணவு வழங்கினார். இந்தியா விடுதலை அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நிதி நெருக்கடியை காரணம் காட்டி அந்த திட்டம் நிறுத்தப்பட்டது.
1955-ம் ஆண்டு காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபோது மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பொதுக் கல்வி இயக்குநராக இருந்தவர் சுந்தரவடிவேல். அவர்தான் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியை முன்னெடுத்தார். அவர் பெரியாரின் பெருந்தொண்டர். அதிகாரிகள் எதிர்ப்பை மீறி அந்த திட்டம் செயலுக்கு வந்தது. இந்த திட்டத்தை தொடர்ந்து திமுக அரசு செயல்படுத்தியது. அதை செழுமை படுத்தும் விதமாக 1971-ம் ஆண்டு ஊட்டச்சத்து திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி செயல்படுத்தினார். அப்போது குழந்தைகளுக்கு பேபி ரொட்டி வழங்கப்பட்டது.
1975-ம் ஆண்டு மாநில அரசின் நிதியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்து உணவுத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டடது. 1989-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு முட்டை வழங்கியது. பின்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மாணவர்களுக்கு கலவை சாதம் வழங்கினார். இப்படி 2021 வரையில் மதிய உணவுத் திட்டம் தான் செயல்பாட்டில் இருந்தது. இந்த நிலையில் சென்னை, அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நான் சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவிகளிடம் பேசினேன். அப்போது காலையில் என்ன சாப்பிட்டீர்கள் என கேட்டேன். அவர்களில் பெரும்பலானவர்கள் எதுவும் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். அதை மனதில் கொண்டு தான் காலை உணவு திட்டத்தை உருவாக்க வேண்டும் என் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டேன். நிதி சுமை இருப்பதாக அதிகாரிகள் சொன்னார்கள். அதை நடத்தியாக வேண்டும் என சொன்னேன். அதோடு கள ஆய்வு நடத்தியதில் ரத்த சோகை இருப்பதாக அறிந்து கொண்டோம். அதனால் தான் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. காலை உணவு மிகவும் முக்கியம்.
31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கிற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள். இந்த திட்டத்துக்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது என சொல்வதைக் காட்டிலும் இதனை நிதி முதலீடு என நான் சொல்வேன். இந்த முதலீடு நிச்சயம் நாட்டுக்கு நலன் சேர்க்கும். இந்தியாவிலேயே முன்னோடி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவதில் நம்பர் 1 மாநிலம் நம் தமிழகம் தான். உயரிய நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் நம் மாநிலத்துக்கு நலன் சேர்க்கும். பெரியார், அண்ணா, கருணாநிதி அமைத்த சமூக நீதி பாதையில் நமது அரசு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலிலும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரிலும், நீட் என்ற பெயரிலும் தடுப்பு சுவர் போடுகிற துரோக ஆச்சாரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு உணவு தயார் செய்பவர்களுக்கும் உங்கள் முதல்வர் அன்பாக ஒரு கோரிக்கை வைக்கிறேன். தாய் உள்ளத்துடன் இந்த திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மாணவர்கள் எது குறித்தும் கவலை கொள்ளாமல் கல்வி பயில வேண்டும். படிப்பு மட்டும் தான் உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாத சொத்து. அந்த சொத்தை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களது மற்ற கவலைகளை நிறைவு செய்ய நமது அரசு இருக்கிறது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அது உங்களை உயர்த்தும்.
நிலவுக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிற விண்கலனை அனுப்பி சாதனை படைத்துள்ள தமிழக அறிவியலாளர்கள் போல இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிற வகையில் உலகமே கவனிக்கும் சாதனையாளராக நீங்கள் உருவாக வேண்டும். அதனை உங்கள் பெற்றோருடன் சேர்ந்து நானும் பார்க்க வேண்டும். அதை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.