எல்லோரும் புரட்சி சேர்த்துக்கொள்வதால், புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது: சீமான்!

எல்லோரும் புரட்சி சேர்த்துக்கொள்வதால், புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

மதுரையில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு “புரட்சித் தமிழர்” என்ற புதிய பட்டம் சூட்டப்பட்டது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு “புரட்சித் தலைவர்” என்ற பெயரும், ஜெயலலிதாவுக்கு “புரட்சித் தலைவி” என்று பட்டம் இருப்பதைப் போல எடப்பாடி பழனிச்சாமிக்கு “புரட்சித் தமிழர்” என்ற புதிய பட்டம் இந்த மாநாட்டில் சூட்டப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ எனப் பட்டம் அளிக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “எனக்கு தெரிந்தவரை புரட்சித் தமிழர் நடிகர் சத்யராஜ் மட்டுமே. நடிகர் சத்யராஜ் மட்டுமே புரட்சித் தமிழன் பட்டத்திற்கு உரியவர். எல்லோரும் தங்கள் பெயருக்கு முன் புரட்சியை சேர்ப்பதால் புரட்சிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. புரட்சி என்ற சொல் அவ்வளவு கேவலப்பட்டு போய்விட்டது. அதிமுகவின் மதுரை மாநாடு அரசியலில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய சீமான், “அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டது போல அதிமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டு நடுநிலையாளராக இருக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் கோடநாடு கொலை வழக்கு பற்றி பேசுவதே இல்லை. முன்னாள் முதல்வர் வீட்டில் பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் மற்றவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குறித்து ஏன் அண்ணாமலை பேசுவதில்லை, கூட்டணி வைத்தால் அவர்கள் புனிதம் ஆகி விடுவார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.