காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்துகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் அதனை கர்நாடகா செயல்படுத்தவில்லை. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தது.
இந்நிலையில் கர்நாடக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடப்பாண்டில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைவாகவே பொழிந்துள்ளது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய பிரதான அணைகள் நிரம்பவில்லை. இருப்பினும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் கர்நாடாக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது:-
நடப்பாண்டு வழக்கமான மழைப்பொழிவு இருந்ததாக தவறான அனுமானத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 25 சதவீத அளவுக்கு மழைப்பொழிவு குறைந்திருப்பதாக தமிழ்நாடு அரசின் மனுவிலும், கர்நாடகத்திலுள்ள 4 அணைகளுக்கான நீர்வரத்து 42.5 சதவீதம் குறைந்திருப்பதை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் பதிவு செய்துள்ளது. கர்நாடகத்தின் அணைகளுக்கான நீர்வரத்து ஆகஸ்டு 8-ந்தேதி நிலவரப்படி 42.5 சதவீதம் குறைந்திருப்பதால், தமிழ்நாட்டுக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி காலம் ஜூன் 12-ந்தேதி முதல் செப்டம்பர் இறுதி வரை ஆகும். இதற்கு 37.27 டி.எம்.சி நீரே போதுமானது. காவிரி மேலாண்மை ஆணையத்தால் மதிப்பிடப்பட்ட இந்த கொள்ளளவை சுப்ரீம் கோர்ட்டு 2018-ம் ஆண்டு தீர்ப்பில் மாற்றம் செய்யவில்லை. மேட்டூர் அணையில் ஆகஸ்டு 23-ந்தேதி நிலவரப்படி 21.655 டி.எம்.சி. நீர் உள்ளது. நாள்தோறும் 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து வருகிறது. எனவே தமிழ்நாட்டில் போதுமான நீர் உள்ளதால், இந்த விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டியதில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளை கர்நாடகம் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 11-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மறுஆய்வு செய்யக்கோரி கர்நாடக அரசு ஆணையத்தில் மனு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் தேவையற்ற எதிர்ப்பே தற்போதைய பிரச்சினைக்கு காரணம். மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால் 13 டி.எம்.சி அளவுக்கான கூடுதல் நீர் தமிழ்நாட்டில் ஜூன்-ஜூலை மாதத்தில் ஏற்பட்ட வறட்சியை தடுக்க உதவியிருக்கும். எனவே நீதியின் நலன் கருதி, தமிழ்நாடு அரசின் மனுவை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரிக்க, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வினை அமைத்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த புதிய அமர்வில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், “கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால், தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகிவிடும். தண்ணீர் திறப்பு விவகாரத்தில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற மறுக்கின்றது. எனவே, கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும்” என வாதிடப்பட்டது.
அப்போது கர்நாடக அரசுத் தரப்பில், “கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை தமிழகம் முறையாக பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டது. கர்நாடகத்தைப் பொறுத்தவரை, இது வறட்சியான ஆண்டாக இருக்கிறது. அதேநேரம் போதிய மழை இல்லாததால், அணைகளில் தண்ணீர் குறைவாக இருக்கிறது. இந்த சூழலில், எங்களால் எப்படி தண்ணீர் திறந்துவிட முடியும். இருப்பினும், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்துக்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், “மிக குறைவான அளவு தண்ணீரையே தற்போது கர்நாடக அரசு விடுவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்ட அளவு தண்ணீரைக்கூட கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை முழுமையாக கர்நாடக அரசு பின்பற்றினால் போதும்” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், “காவிரி மேலாண்மை ஆணையம் 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தி இருக்கிறதா என்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.