அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 28ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தியபிறகு, மறுபடியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

5 நாள் கஸ்டடியில் இருக்கும்போது, செந்தில் பாலாஜியிடம் தினமும் நடத்திய விசாரணையின் தகவல்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.. அவை ஸ்க்ரிப்ட்டாகவும் எழுதப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனராம் அமலாக்கத்துறையினர். செந்தில்பாலாஜி, அவரது தம்பி மற்றும் பினாமிகளை குறிவைத்து ரெய்டில் இறங்குவதற்கு முன்பே பல ஆதாரங்களை சேகரித்ததாகவும், ரெய்டிலும் எதிர்பாராத ஆதார ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்பட்டன. அதுமட்டுமல்ல, இவைகள் இரண்டையும், கஸ்டடி விசாரணையில் செந்தில் பாலாஜி கூறியவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பணிகள் டெல்லியில் நடந்து வருகின்றன. இதனை வைத்து ஒரு ரிப்போர்ட் தயாரிக்கப்படுமாம். அந்த ரிப்போர்ட்டை வைத்து, கூடுதலாக மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அமலாக்கத்துறையினர் திட்டமிடுவதாக தகவல் கிடைக்கிறது.

செந்தில்பாலாஜிக்கு சிறைக்காவல் இன்றுடன் முடிவடைய இருக்கிறது.. இதற்கிடையே, செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறையிலிருந்து வீடியோ காணொலி காட்சி மூலம் எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நிதிமன்ற பொறுப்பு நீதிபதி சிவகுமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 28ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.