பா.ஜனதாவுக்கு மாற்று இந்தியா கூட்டணி அல்ல: ஓவைசி

தேசத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத 3-வது அரசாங்கம் தற்போது தேவைப்படுகிறது. அப்போது தான் இந்த நாட்டில் நல்லது நடக்கும் என்று அசாதுதீன் ஓவைசி கூறினார்.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பா.ஜனதாவுக்கு மாற்று அல்ல. நாட்டை சுமார் 50 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்தது. கிட்டத்தட்ட பா.ஜனதா கூட்டணி 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. தேசத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத 3-வது அரசாங்கம் தற்போது தேவைப்படுகிறது. அப்போது தான் இந்த நாட்டில் நல்லது நடக்கும். இந்தியா கூட்டணி என்பது உயரடுக்கு மக்களின் கிளப் ஆக உள்ளது. உண்மையில் அவர்கள் எங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி மாயாவதி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் தலைவர்கள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. இந்தியா கூட்டணி செயல் திட்டம் என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள். உபா சட்டத்தை வலுப்படுத்த பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் சிறையில் வாடுகிறார்கள். இந்தியா கூட்டணிக்கு நாங்கள் செல்லமாட்டோம். நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறது. முதல்-மந்தரி சந்திரசேகரராவ் திறமையானவர். தொலை நோக்கு பார்வை கொண்டார். அவரது அரசியல் சாதுரியத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் ஓவைசி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம் பா.ஜனதாவின் பி அணியாக செயல்படுகிறது என்று இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.