பாஜக “விஷப்பாம்பு”, அதிமுக “குப்பை”: உதயநிதி ஸ்டாலின்

பாஜகவையும், அதிமுகவையும் குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட்டிக்கதை சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

சமீபகாலமாக பாஜகவினரும், உதயநிதி ஸ்டாலினும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போட மாட்டேன் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருந்த நிலையில் அதற்கு உதயநிதி ஸ்டாலின் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார். “அவர் ஆர்.என். ரவி அல்ல.. ஆர்எஸ்எஸ் ரவி. நீங்கள் யார் மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் எனக் கூறுவதற்கு? முதல்வர் அளிக்கும் கோப்புகளை டெல்லிக்கு அனுப்பும் சாதாரண போஸ்ட் மேன் தானே நீங்கள். உங்களால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று ஜெயிக்க முடியுமா? உங்கள் கோட்பாடுகளை சொன்னால் மக்கள் செருப்பால் அடிப்பார்கள்” என உதயநிதி பேசினார். உதயநிதியின் இந்த பேச்சால் கோபமடைந்த பாஜகவினர், உதயநிதியை விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மீண்டும் பாஜகவையும், அதிமுகவையும் சீண்டும் வகையில் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இதுதொடர்பாக திமுக கூட்டம் ஒன்றில் உதயநிதி கூறியதாவது:-

நான் உங்களுக்கு இப்போது ஒரு குட்டிக்கதை சொல்ல போகிறேன். மக்கள் கவனமாக இந்தக் கதையை கேளுங்கள். ஒரு அழகான வீட்டிற்குள் விஷப்பாம்பு ஒன்று வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அந்த விஷப்பாம்பை விரட்டியுள்ளனர். இருந்தாலும் அடிக்கடி அந்த வீட்டிற்குள் விஷப்பாம்பு வந்துள்ளது. பல முறை விரட்டியும் இந்த பாம்பு எப்படி வருகிறது என வீட்டின் உரிமையாளர் பார்த்துள்ளனர். அப்போது, வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக்குள் ஒளிந்துகொண்டு தான் இந்த பாம்பு வீட்டிற்குள் வருவதை அவர்கள் கண்டறிநதனர். அதன் பிறகு அந்தக் குப்பையை அவர்கள் அகற்றினர். அதன் பின்னர் அந்த விஷப்பாம்பு வரவே இல்லை.

இந்தக் கதையில் வரும் அழகான வீடுதான் நமது தமிழ்நாடு. விஷப்பாம்பு யார் தெரியுமா.. பாஜக தான். குப்பை தான் அதிமுக. குப்பையை ஒழித்தது போல் அதிமுகவை ஒழித்தால்தான் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவை நம்மால் நிரந்தரமாக விரட்ட முடியும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.