பெங்களூரில் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுகளை கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் விஞ்ஞானிகளுடன் உரையாற்றி அவர், சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என அழைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ. ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்நிலையில் இதற்கு காரணமான விஞ்ஞானிகளை, சந்திரயான் 3 தரையிறங்கிய நாளன்றே பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கால் மூலம் அழைத்த வாழ்து கூறியிருந்தார். அந்த சமயம் தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் மாநாடு நடந்துக்கொண்டிருந்ததால் அவரால் விஞ்ஞானிகளை நேரில் சந்திக்க முடியவில்லை. அதேபோல, இந்த மாநாடு முடித்த கையோடு அவர் கிரீஸ் நாட்டுக்கு சென்றிருக்கிறார். இதனையடுத்து இன்று அவர் இந்தியா திரும்பியுள்ளார். இந்தியா திரும்பிய பிரதமர் நேரடியாக பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் தரையிறங்கி இஸ்ரோ மையத்திற்கு சென்றிருக்கிறார். சாலை மார்க்கமாக சென்ற அவருக்கு வழி நெடுக கட்சியினர் சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து சேர்ந்த பிரதமரை இஸ்ரோ தலைவர் சோம்நாத் வரவேற்றார். இதனையடுத்து சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் மற்றும் அவரது தலைமையிலான விஞ்ஞானிகளை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். பின்னர் விஞ்ஞானிகளோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் விஞ்ஞானிகளுடன் உரையாற்றிய அவர் கூறியதாவது:-
சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியபோது நான் இந்தியாவில் இல்லை. ஆனால் என்னுடைய மனம் முழுவதும் இங்குதான் இருந்தது. அந்த கடைசி 15 நிமிடம் என்னுடைய படபடப்பு மேலும் அதிகரித்தது. எனக்கு அப்போது தோன்றியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். முதலில் இந்தியாவுக்கு போக வேண்டும். அதுவும் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு போக வேண்டும் என்றுதான் எனக்கு தோன்றியது. இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு காரணமான உங்கள் அர்ப்பணிப்புக்கு சல்யூட் செய்கிறேன். உங்கள் பொறுமைக்கு சல்யூட் செய்கிறேன். உங்கள் கடின உழைப்புக்கு சல்யூட் செய்கிறேன். உங்கள் உத்வேகத்திற்கு சல்யூட் செய்கிறேன்.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயரிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாகவும் கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல கடந்த 2019ம் ஆண்டு சந்திராயன் 2 விழுந்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என்று அழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை குறிப்பிடவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் நமது விண்வெளித் துறையின் மதிப்பு 8 பில்லியன் டாலரிலிருந்து 16 பில்லியன் டாலராக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. இவ்வாறு அவர் கூறினார்.