கார்கில் போர் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லடாக் யூனியன் பிரதேசத்தில் 9 நாட்களாக மோட்டார் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்தார். இறுதியாக நேற்று முன்தினம் கார்கில் நகருக்கு சென்றார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று கார்கிலில் இருந்து ஸ்ரீநகருக்கு காரில் புறப்பட்டார். வழியில், ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் திராஸ் பகுதியில் கார்கில் போர் நினைவிடம் அமைந்துள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு, கார்கிலில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த போரில் பலியான இந்திய வீரர்களின் நினைவாக அந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அங்கு ராகுல்காந்தி, உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
தனது சமூக வலைத்தளத்தில் இதுபற்றி ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
கார்கில் என்பது வெறும் இடமல்ல. அது வீர வரலாறு. எண்ணற்ற வீரர்கள் துணிச்சலுடன் பணியாற்றிய மண். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, கார்கில் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். அவர் பேசியதாவது:-
நான் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டபோது, லடாக்கில்தான் அதை முடிப்பதாக இருந்தது. ஆனால், கடுமையான பனி காரணமாக, அங்கு செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. எனவே, ஸ்ரீநகருடன் முடித்துக்கொண்டோம். இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடர்ச்சியாகவே, லடாக்குக்கு வந்துள்ளேன். ஒரு வாரம் முழுவதும் லடாக்கின் மூலை, முடுக்கெல்லாம் மோட்டார் சைக்கிளில் சுற்றினேன். பாங்காங் ஏரியில் இருந்தபோது ஒரு விஷயம் தெளிவானது. ஆயிரக்கணக்கான கி.மீ. இந்திய நிலங்களை சீனா பறித்துக்கொண்டுள்ளது. இது லடாக்கில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். ஒரு அங்குல நிலத்தை கூட சீனா பறிக்கவில்லை என்று சொல்வது பொய். லடாக், பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. நாட்டிலேயே மிக அழகான பிராந்தியம். இங்கு இயற்கை வளம் நிறைந்துள்ளது. இத்தகைய லடாக் நிலத்தை அதானிக்கு கொடுக்க பா.ஜனதா விரும்புகிறது. ஆனால், நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். சிலர் தங்கள் இதயத்தில் இருப்பதை பேசுகிறார்கள். நான் உங்கள் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய வந்துள்ளேன். லடாக்கின் பல பகுதிகளில் மக்களுடன் பேசி, அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்தேன். வேலையின்மை, நிலத்துக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை தெரிவித்தனர். அந்த பிரச்சினைகளை நான் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்புவேன். இவ்வாறு அவர் பேசினார்.